வெயில் வாட்டி வதைப்பதால் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது


வெயில் வாட்டி வதைப்பதால் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 18 April 2019 4:15 AM IST (Updated: 18 April 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

வெயில் வாட்டி வதைப்பதால் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது.

ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மாட்டுச்சந்தை நேற்று கூடியது.

இந்த சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆனால் கடந்த வாரத்தை காட்டிலும் மாடுகள் குறைவாகவே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது.

இதுகுறித்து சந்தையின் மேலாளர் முருகன் கூறியதாவது:-

கோடை காலமாக இருப்பதால் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரோட்டில் அதிகபட்சமாக 105 டிகிரி வரை வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மாடுகளை வாகனங்களில் ஏற்றி கொண்டு வரவும், வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லவும் மிகவும் சிரமமாக உள்ளது. குறிப்பாக எருமை மாடுகளை கொளுத்தும் வெயிலில் வாகனங்களில் ஏற்றி கொண்டு செல்வது என்பது சவாலான விஷயம். இதனால் இந்த வாரம் சந்தைக்கு மாடுகள் வரத்து மிகவும் குறைந்தது.

200 பசு மாடுகளும், 50 எருமை மாடுகளும் என மொத்தம் 250 மாடுகள் மட்டுமே கொண்டு வரப்பட்டன. இதேபோல் 150 கன்றுக்குட்டிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. கடந்த சில வாரங்களாக 250-க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் வெயிலின் கொடுமையால் மாடுகள் வரத்து குறைந்துவிட்டது. இதே போல் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநில வியாபாரிகள் மட்டுமே வந்திருந்தனர். கேரளா, கோவா உள்ளிட்ட மாநில வியாபாரிகள் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story