திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 15 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர் தேர்தல் பணியில் 7,698 ஊழியர்கள் பங்கேற்பு


திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 15 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர் தேர்தல் பணியில் 7,698 ஊழியர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 18 April 2019 4:15 AM IST (Updated: 18 April 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) 15 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர். தேர்தல் பணியில் 7,698 ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.

திருச்சி,

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியதாகும். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் புதிய வாக்காளர்கள் பட்டியல்படி, 15 லட்சத்து 8 ஆயிரத்து 329 வாக்காளர்கள் இன்று(வியாழக்கிழமை) ஓட்டு போட உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள்–7,39,241. பெண் வாக்காளர்கள்–7,68,940. மூன்றாம் பாலினமான திருநங்கைகள்–148 பேர் ஆவர். இதுதவிர ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் 634 பேர் இடம் பெற்றுள்ளனர். ஆக மொத்தம் 15 லட்சத்து 8 ஆயிரத்து 963 வாக்காளர்கள் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ளனர்.

சட்டமன்ற தொகுதி வாரியாக விவரம் வருமாறு:–

ஸ்ரீரங்கம்–2,96,309. திருச்சி மேற்கு–2,60,144. திருச்சி கிழக்கு–2,47,185. திருவெறும்பூர்–2,83,999. கந்தர்வகோட்டை–1,91,628. புதுக்கோட்டை–2,29,698. மொத்தம்–15,08,963. பழைய வாக்காளர் பட்டியலில் 14,89,267 பேர் இடம்பெற்று இருந்தனர்.

புதிய வாக்காளர்களாக பட்டியலில் 82,012 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள வண்ண அடையாள அட்டை வினியோகம் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இன்று(வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இன்றைய தேர்தல் பணியில் மட்டும் 7,968 ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். ஸ்ரீரங்கம்–1,627. திருச்சி மேற்கு–1,301. திருச்சி கிழக்கு–1,238. திருவெறும்பூர்–1,411. கந்தர்வகோட்டை–1,138. புதுக்கோட்டை–1,253 என 6 சட்டமன்ற தொகுதியிலும் 7,968 ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் 1,555 ஊழியர்களும், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட லால்குடி சட்டமன்ற தொகுதியில் 1,195 ஊழியர்களும், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 1,310 ஊழியர்களும், முசிறி சட்டமன்ற தொகுதியில் 1,224 ஊழியர்களும், துறையூர் சட்டமன்ற தொகுதியில் 1,286 பேர் என 6,570 ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் வாக்குப்பதிவு தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்–1, வாக்குப்பதிவு அலுவலர்–2, வாக்குப்பதிவு அலுவலர்–3 மற்றும் வாக்காளர் எண்ணிக்கை 1,200 மற்றும் அதற்கு மேல் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு அலுவலர்–4 என்ற நிலையில் பணியில் ஈடுபடுகிறார்கள்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நேற்று திருச்சி புத்தூரில் உள்ள பி‌ஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் ஆணை வழங்கப்பட்டது. அந்த ஆணைகளை பெற்றுக்கொண்ட ஆண், பெண் ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு தங்களது உடைமைகளுடன் புறப்பட்டு சென்றனர்.

அங்கு நேற்று மாலை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் வி.வி.பேட் எந்திரங்கள் லாரிகள் மூலம் வந்து இறங்கியதும் வாக்களிக்க தயார் நிலையில் அனைத்து எந்திரங்களும் பொருத்தப்பட்டன. வாக்குப்பதிவு இன்று(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.

முன்னதாக, காலை 6 மணிக்கு அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்படும். அவர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி அதிகாரி 50 ஓட்டுகளை போட்டு காண்பிப்பார். அப்போது முகவர்கள், ஓட்டுகள் முறையாக பதிவாகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். அப்போது ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம். பின்னர், மாதிரி வாக்குகள் அழிக்கப்பட்டு, ஒரு ஓட்டுக்கூட பதிவாகாத எந்திரமாக வைக்கப்படும். பின்னர் வழக்கம்போல, காலை 7 மணி முதல் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யலாம்.


Next Story