வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக புகார், திருப்பூரில் அ.ம.மு.க. நிர்வாகிகள் 2 பேர் சிக்கினர்


வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக புகார், திருப்பூரில் அ.ம.மு.க. நிர்வாகிகள் 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 18 April 2019 3:46 AM IST (Updated: 18 April 2019 3:46 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து திருப்பூரில் அ.ம.மு.க. நிர்வாகிகள் 2 பேர் சிக்கினர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த சிறுபூலுவப்பட்டி பெருமாள் கோவில் வீதி அருகே ஒரு சிலர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து கொண்டு இருப்பதாக நேற்று மதியம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக புகார் வந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரியான தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பசும்பொன் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்றனர்.

பறக்கும் படை அதிகாரிகள் அங்கு வருவதை கண்டதும் அப்பகுதியில் திரண்டு இருந்த வாக்காளர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். அப்போது வாலிபர்கள் 2 பேர் மட்டும் தாங்கள் வந்த மொபட் அருகே நின்று கொண்டு இருந்தனர். இதையடுத்து அங்கு சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவர்களது மொபட்டை சோதனை செய்தனர்.

அதில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வத்துக்கு வாக்களிக்குமாறு குறிப்பிடப்பட்டு இருந்த துண்டுபிரசுரங்கள், 14-வது வார்டுக்கு உட்பட்ட சிறுபூலுவப்பட்டி வாக்காளர் பட்டியல், ரூ.5 ஆயிரம் ரொக்கம் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் சிறுபூலுவப்பட்டி பகுதியை சேர்ந்த பிரபு(வயது 32), வினோத்குமார்(31) என்பதும் அ.ம.மு.க. நிர்வாகிகள் என தெரிய வந்தது.

இது குறித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரி பசும்பொன் 15 வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் பிரபு, வினோத்குமார் ஆகிய 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அவர்களிடம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தார்களா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story