போதிய பஸ்வசதி இல்லாததால் ஆத்திரம் புதிய பஸ்நிலையம் முன்பு பயணிகள் மறியல் - போலீஸ் தடியடி நடத்தியதால் பரபரப்பு
போதிய பஸ்வசதிகள் செய்து கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் புதிய பஸ்நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி தேர்தல் ஆணையமும், அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வெளியூர்களில் வேலை செய்யும் வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் இங்கு தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.
நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் தமிழக தேர்தல் இன்று நடைபெற உள்ளதால் திருப்பூரில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னரே ஏராளமான வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பஸ்கள், ரெயில்கள் மூலம் சென்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினமும் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதால் புதிய பஸ்நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இன்று தேர்தல் நடைபெறுவதால், தொடர்ந்து நேற்று இரவும் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் பணிகளை முடித்து விட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ்நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் குவிந்தனர். பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து துறை அறிவித்திருந்த போதும், போதிய பஸ்கள் நேற்று இயக்கப்படவில்லை.
பஸ்நிலையத்தில் பஸ்கள் இல்லாததால் ஏராளமானோர் பல மணி நேரமாக காத்திருந்தனர். ஒரு சில பஸ்கள் மட்டுமே அவ்வப்போது வந்து பயணிகளை ஏற்றி சென்றது. இதனால் முண்டியடித்து கொண்டு பஸ்களில் ஏறி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். ஆனால் நேரம் செல்ல செல்ல பயணிகளின் கூட்டம் அதிகரித்து கொண்டே வந்தது. பல மணிநேரம் காத்திருந்தும் பஸ்கள் வராததால் அங்கிருந்து போக்குவரத்து அலுவலர்களிடம் கேட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் திடீரென புதிய பஸ்நிலையம் முன்பு பெருமாநல்லூர் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும், சாலை மறியலை கைவிடவும் அறிவுறுத்தினார்கள். ஆனால் உடனடியாக பஸ் வசதி செய்து கொடுத்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி அங்கிருந்து கலைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது மட்டுமின்றி திருப்பூர் ரெயில் நிலையத்திலும் வழக்கத்திற்கு அதிகமான கூட்டம் இருந்தது. கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட ரெயில்களிலும் வழக்கத்திற்கு அதிகமாகவே பயணிகள் பயணித்தனர்.
Related Tags :
Next Story