மாவட்டம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்


மாவட்டம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்
x
தினத்தந்தி 18 April 2019 4:00 AM IST (Updated: 18 April 2019 3:46 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர், வேடசந்தூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளிலும் மொத்தம் 17 லட்சத்து 93 ஆயிரத்து 943 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி கரூர் நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்றுள்ளது. மீதமுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளும் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் உள்ளன. திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி மற்றும் அதில் இடம்பெற்றுள்ள நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 15 லட்சத்து 40 ஆயிரத்து 495 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு 1,787 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் இடைத்தேர்தல் நடத்தப்படும் நிலக்கோட்டை தொகுதியில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 209 வாக்காளர்கள் ஓட்டுபோட இருக்கின்றனர். இதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயாராக உள்ளன.

மேலும் சின்னங்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் தாலுகா அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. அதோடு, கட்டுப்பாட்டு எந்திரம், வாக் குப்பதிவை உறுதி செய்யும் எந்திரம், அழியாத மை உள்ளிட்ட பொருட்களும் வாக்குச்சாவடி வாரியாக பிரித்து வைக் கப்பட்டு இருந்தன.

இன்று வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணி நேற்று காலை தொடங்கியது. இதற்காக மண்டல தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக் கப்பட்ட லாரிகள் நேற்று தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன.

அங்கு மண்டலம் வாரியாக தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் மற்றும் இதர பொருட்கள் லாரியில் ஏற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

மேலும் வாகனங்கள் செல்லாத மலைக்கிராமங்களுக்கு குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. அப்போது மண்டல அலுவலர்களும் உடன் சென்றனர். வாக்குச்சாவடிகளில் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம், வாக்குப்பதிவு எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து வாக்குச்சாவடிகளை தயார் செய்யும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டனர்.

வாக்கச்சாவடிகளில் வாக் காளர்கள் உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தனித்தனி பாதை அமைக்கப்பட்டது. மேலும் வாக்காளர்கள் ரகசியமாக வாக்களிக்கும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் இடம், அட்டையை கொண்டு மறைக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரம் ஆகியவற்றை இணைத்து தயாராக வைத்தனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் இரவு வரை இந்த பணிகள் நடந்தன.

Next Story