நிரவ் மோடி வழக்கை விசாரித்த அதிகாரி விடுவிப்பு: மும்பை அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனர் அதிரடி நீக்கம்


நிரவ் மோடி வழக்கை விசாரித்த அதிகாரி விடுவிப்பு: மும்பை அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனர் அதிரடி நீக்கம்
x
தினத்தந்தி 18 April 2019 4:15 AM IST (Updated: 18 April 2019 4:07 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடியின் பணமோசடி வழக்கை விசாரித்த அதிகாரியை விடுவித்த காரணத்துக்காக அமலாக்கத்துறையின் மும்பை மண்டல சிறப்பு இயக்குனர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

மும்பை,

வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடியின் பணமோசடி வழக்கை விசாரித்த அதிகாரியை விடுவித்த காரணத்துக்காக அமலாக்கத்துறையின் மும்பை மண்டல சிறப்பு இயக்குனர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

சிறப்பு இயக்குனர்

மராட்டியத்தின் 1994-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பிரிவை சேர்ந்தவர் வினீத் அகர்வால். இவரை 2017-ம் ஆண்டு அமலாக்கத்துறையின் மும்பை மண்டல சிறப்பு இயக்குனராக 5 ஆண்டு காலத்துக்கு பணியாற்ற மத்திய அரசு நியமித்தது. மும்பை மண்டல அமலாக்கத்துறை என்பது மராட்டியம், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் சண்டிகார் ஆகிய 4 மாநிலங்களை உள்ளடக்கியது.

இந்த நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கிவிட்டு லண்டனுக்கு தப்பியோடிய குஜராத் வைர வியாபாரி நிரவ் மோடியின் பணமோசடி வழக்கை, மும்பை மண்டல சிறப்பு இயக்குனர் வினீத் அகர்வாலுக்கு கீழ் பணியாற்றும் இணை இயக்குனர் சத்யபிரத் குமார் விசாரித்து வந்தார். அவரை நிரவ் மோடி பணமோசடி வழக்கு விசாரணையில் இருந்து திடீரென விடுவித்து வினீத் அகர்வால் உத்தரவிட்டார்.

அதிரடி நீக்கம்

ஆனால் அமலாக்கத்துறையில் இணை இயக்குனராக பணியாற்றும் ஒருவரை இதுபோன்ற வழக்கு விசாரணையில் இருந்து விடுவிக்க மண்டல சிறப்பு இயக்குனருக்கு அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டது. அந்த அதிகாரம் அமலாக்கத்துறை இயக்குனருக்கு மட்டுமே உண்டு. எனவே சிறப்பு இயக்குனர் வினீத் அகர்வால், இயக்குனரின் அதிகாரத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தது மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து வினீத் அகர்வாலை சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி மத்திய அரசின் நிதித்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. அமலாக்கத்துறையில் அவருக்கு மீதமுள்ள 3 ஆண்டு பணிகாலத்தையும் மத்திய அரசு ரத்து செய்தது.

இதையடுத்து வினீத் குமாரின் பொறுப்புகள் அனைத்தும் சென்னை மண்டல அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனரிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.

Next Story