‘வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்’ கலெக்டர் தகவல்


‘வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்’ கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 April 2019 10:30 PM GMT (Updated: 17 April 2019 11:06 PM GMT)

வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்,

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியிலும் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் தென்காசி நாடாளுமன்ற தொகுதியிலும், திருச்சுழி சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியிலும் இடம் பெற்றுள்ளன.

7 சட்டமன்ற தொகுதிகளிலும் 15,89,416 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 2,29,624 வாக்காளர்களும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 2,37,757 வாக்காளர்களும், சாத்தூர் தொகுதியில் 2,36,696 வாக்காளர்களும், சிவகாசியில் 2,46,355 வாக்காளர்களும், விருதுநகரில் 2,22,105 வாக்காளர்களும், அருப்புக்கோட்டையில் 2,14,134 வாக்காளர்களும், திருச்சுழி தொகுதியில் 2,12,744 வாக்காளர்களும் உள்ளனர். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுடன் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

திருச்சுழியில் 273, சாத்தூரில் 283, விருதுநகரில் 255, அருப்புக்கோட்டையில் 252, ராஜபாளையத்தில் 261, ஸ்ரீவில்லிபுத்தூரில் 281, சிவகாசியில் 276 என மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளிலும் 1,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 4,999 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 2,726 கட்டுப்பாட்டு எந்திரங்களும் காகித சரிபார்ப்பு எந்திரங்கள் 2,867-ம் பயன்படுத்தப்படுகின்றன.

வாக்குப்பதிவு மையங்களில் 9,803 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 350 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படை, முன்னாள் ராணுவத்தினர், காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் என சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபடுகின்றனர். 253 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. 820 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களில் 60 சதவீதம் பேருக்கே பூத் சிலிப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. மற்றவர்களுக்கு வழங்கப்படாத நிலையில், 04562-1950 என்ற தொலைபோசி எண்ணில் தொடர்பு கொண்டு பாகம் எண் தொடர்பான விளக்கங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

வாக்குச்சாவடி மையங்களுக்கு எந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கொண்டு செல்லும் பணி நேற்று நடைபெற்றது. அனைத்து பணியாளர்களும் வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் இரவு தங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு தொடங்க தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு முடிந்ததும் இன்று மாலை அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான விருதுநகரிலுள்ள வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு 24 மணி நேரபாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் எந்திரங்கள் வைக்கும் இடம் மற்றும் எண்ணும் இடங்களில் நடந்து வரும் பணிகளை கலெக்டர் சிவஞானம் பார்வையிட்டார்.

Next Story