திருமணம் முடிந்ததும் மணக்கோலத்தில் வாக்களித்த புதுமண தம்பதிகள்
ஓமலூர், வாழப்பாடி பகுதியில் திருமணம் முடிந்ததும், மணக்கோலத்தில் புதுமண தம்பதிகள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு அளித்தனர். அளித்தனர்.
ஓமலூர்,
ஊரெல்லாம் நேற்று தேர்தல் திருவிழா களை கட்டிய அதே நேரத்தில் பல திருமண விழாக்களும் நடைபெற்றன. இந்த திருமண விழாக்களில் தாலிகட்டியவுடன், தேர்தல் திருவிழாவில் ஓட்டு போட புதுமண தம்பதிகள் ஆர்வம் காட்டிய ருசிகரங்களும் சேலம் மாவட்டத்தில் நேற்று அரங்கேறின. இது பற்றிய விவரம் வருமாறு:–
வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மைக்செட் ரவி. இவருடைய மகன் ராஜராஜன், கட்டிடக்கலை பொறியியல் வல்லுநரான இவருக்கும், இதே கிராமத்தை சேர்ந்த பட்டதாரிப்பெண் நந்தினி தேவிக்கும் நேற்று காலை துக்கியாம்பாளையம் முருகன் கோவிலில், பெற்றோர், உறவினர்கள் ஆசியோடு திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்ததும் மணக்கோலத்திலேயே வீட்டுக்கு செல்லாமல் துக்கியாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்ற புதுமணத்தம்பதியர், தங்களது ஓட்டுகளை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினர். பின்னர் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு விழாவிற்கு சென்றனர்.
இந்த தம்பதியருக்கு, சமூக ஆர்வலர்கள் பலரும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
இது குறித்து புதுமணத்தம்பதி ராஜராஜன், நந்தினிதேவி கூறும் போது, ‘வாழ்க்கைக்கு நல்ல துணையை தேர்வு செய்த எங்களது திருமண நாளில், நாட்டுக்கு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் அமைந்துள்ளது. இருவருக்கும் ஒரே வாக்குச்சாவடி அமைந்ததும், இந்த தேர்தலில் மணக்கோலத்தில் சென்று இருவரும் ஓட்டுப்பதிவு செய்ததும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்கள்.
ஓமலூரை அடுத்த புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் நடராஜ் (வயது 29). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், ஏற்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ்–சரஸ்வதி தம்பதியின் மகளும், பட்டதாரியுமான ஷாலினிக்கும்(25) திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களின் திருமணம் காருவள்ளி சின்ன திருப்பதியில் உள்ள பெருமாள் கோவிலில் நேற்று காலையில் நடந்தது. இதையடுத்து ஓமலூரில் உள்ள ஒரு மண்டபத்தில் வரவேற்பு நடைபெற்றது. இதை முடித்துக்கொண்டு, மணமகன் நடராஜ், மணக்கோலத்தில், தனது மனைவியுடன் தனது சொந்த ஊருக்கு சென்றார்.
உடனே அவர் தேர்தலில் ஓட்டுப்போடுவது ஜனநாயக கடமை என்று தனது குடும்பத்தினரிடம் கூறி விட்டு, அங்குள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் வந்தார். அங்கு வாக்குச்சாவடிக்குள் சென்று தனது ஓட்டை பதிவு செய்து விட்டு வெளியே வந்தார்.
பின்னர் அவர் கூறும் போது, எனது திருமண நாளில் ஜனநாயக கடமையை ஆற்றி விட்டேன். எனது மனைவியை அவரது சொந்த ஊரான ஏற்காட்டுக்கு அவரது ஓட்டை பதிவு செய்ய காரில் அழைத்து செல்கிறேன் என்று தெரிவித்தார்.