சேலம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல்: கலெக்டர் ரோகிணி, ஆணையாளர் சதீஷ் வாக்களித்தனர்


சேலம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல்: கலெக்டர் ரோகிணி, ஆணையாளர் சதீஷ் வாக்களித்தனர்
x
தினத்தந்தி 19 April 2019 4:30 AM IST (Updated: 18 April 2019 9:56 PM IST)
t-max-icont-min-icon

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் கலெக்டர் ரோகிணி, ஆணையாளர் சதீஷ் ஆகியோர் வாக்களித்தனர்.

சேலம், 

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ரோகிணி, வாக்களிப்பதற்காக நேற்று காலை சேலம் அய்யந்திருமாளிகையில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு வந்தார்.

பின்னர் அவர் வரிசையில் நின்று 17–வது நபராக வாக்களித்தார். அவருடன் வந்த பயிற்சி கலெக்டர் வந்தனா கார்க்கும் வரிசையில் நின்று வாக்களித்தார். இதையடுத்து கலெக்டர் ரோகிணி வாக்குச்சாவடியில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:–

சேலம் மாவட்டத்தில் உள்ள 3,288 வாக்குச்சாவடி மையங்களில் மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மையங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மாவட்டத்தில் உள்ள 242 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும், 2 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்து உள்ளோம். இதுதவிர அந்த வாக்குச்சாவடி மையங்களில் துணை ராணுவமும், மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் 1,353 வாக்குச்சாவடி மையங்களுக்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 244 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. அமைதியான முறையிலும், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் வாக்குப்பதிவு நடைபெற வாக்குச்சாவடிகளில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் தெற்கு சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சதீஷ் வாக்குப்பதிவு செய்வதற்காக நேற்று காலை குளுனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தார். பின்னர் அவர் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்தார். பின்னர் அவர் தெற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.


Next Story