சேலம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் ஓட்டுப்பதிவு தாமதம் வாக்காளர்கள் அவதி


சேலம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் ஓட்டுப்பதிவு தாமதம் வாக்காளர்கள் அவதி
x
தினத்தந்தி 19 April 2019 3:00 AM IST (Updated: 18 April 2019 10:13 PM IST)
t-max-icont-min-icon

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் ஓட்டுப்பதிவு தாமதம் ஏற்பட்டது. இதனால் ஓட்டுப்போட வந்த வாக்காளர்கள் அவதிக்குள்ளாகினர்.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் நேற்று நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது. இதற்காக தொகுதி முழுவதும் 1,803 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 172 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆகும். அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சேலம் உள்பட பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் திடீரென பழுதானதால் குறிப்பிட்ட நேரத்தில் அதாவது 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கப்படவில்லை. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் ஓட்டுபோட முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோளம்பள்ளம் வாக்குச்சாவடி எண் 231–ல் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியவுடன் எந்திரம் திடீரென பழுதானது. இதனால் தேர்தல் பிரிவு உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு வந்து பழுதடைந்த எந்திரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

இதேபோல், அழகாபுரம் பெரியபுதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 164–ல் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் ஓட்டு போடுவதற்காக ஆர்வமுடன் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் அவதிக்குள்ளாகினர். அந்த சமயத்தில் அங்கு ஓட்டுபோட வந்த தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன், அங்கிருந்த அலுவலர்களிடம் விவரம் கேட்டு தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து வாக்குப்பதிவு எந்திரம் சரி செய்யப்பட்டு 1 மணி நேரத்திற்கு பின் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. ரெட்டியூரில் உள்ள வாக்குச்சாவடி எண்–134, காமநாயக்கன்பட்டி உள்ள வாக்குச்சாவடி எண்–252 ஆகிய வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானது. பின்னர் அவற்றை அதிகாரிகள் சரி செய்து தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

வீரபாண்டி ஒன்றியம் மலையம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சுமார் 1½ மணி நேரம் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த எந்திரம் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு காத்திருந்த வாக்காளர்கள் தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர்.

ஜலகண்டாபுரம், மேச்சேரி, ஓமலூர், வீரபாண்டி உள்பட பல்வேறு இடங்களிலும் சில வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் உடனடியாக சரி செய்து தொடர்ந்து ஓட்டுப்பதிவு நடப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட பழுதால் வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.


Next Story