குடியாத்தம், ஆம்பூர், சோளிங்கர் சட்டசபை இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு


குடியாத்தம், ஆம்பூர், சோளிங்கர் சட்டசபை இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 19 April 2019 4:30 AM IST (Updated: 18 April 2019 10:20 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம், ஆம்பூர், சோளிங்கர் ஆகிய சட்டசபை இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.

ஆம்பூர், 

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் ஆகிய சட்டசபை இடைத்தேர்தல்களில் நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 6 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு காலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

சோளிங்கர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வேலம் உயர்நிலைப்பள்ளியில் பொதுமக்கள் வாக்களிக்க 2 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளருக்கு ஒரு வாக்கு, சோளிங்கர் சட்டசபை இடைத்தேர்தல் வேட்பாளருக்கு ஒரு வாக்கு என வாக்காளர்கள் 2 வாக்குகள் பதிவு செய்தனர். அதே பகுதியை சேர்ந்த 97 வயதான முனியம்மாள் ஆட்டோவில் வந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், வேலம் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெறுகிறதா? என பார்வையிட்டார். அப்போது அவர், பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்த கட்சி நிர்வாகிகளை வெளியேற்றும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதுவரை எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். என்றார்.

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி காட்பாடி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பிரம்மபுரம் ஆதிதிராவிட நல நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 2 வாக்குச்சாவடிகளில் 18 வயது நிரம்பிய இளம்வாக்காளர்கள் முதன் முறையாக ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

குடியாத்தம் சட்டசபை இடைத்தேர்தல் தொகுதி குடியாத்தம் நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். நாடாளுமன்ற தொகுதியை விட சட்டசபை இடைத்தேர்தலில் வாக்களிக்கவே பொதுமக்கள் அதிகளவு ஆர்வம் காட்டினர்.

வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் குடிநீர் வசதி செய்யப்படவில்லை. இதனால் நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்து நின்ற பொதுமக்கள் தண்ணீர் தேடி அலையும் நிலை காணப்பட்டது.

வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வருபவர்கள் கட்சிக்கொடியோ, துண்டோ அணிந்து வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், வேலம் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த ஆண் வாக்காளர்கள் கட்சி சின்னம் பொறித்த டீ-சர்ட் அணிந்து வந்திருந்தனர். அதேபோல் சிலர் கட்சி துண்டு அணிந்தபடி வந்தனர்.

ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கியது. காலை முதலே ஏராளமான ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து நீண்ட வரிசையில் காத்து இருந்து தங்களது வாக்குகளை செலுத்தினர். அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதிராமலிங்கராஜா குருவராஜபாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஓட்டு போட்டார். தி.மு.க. வேட்பாளர் அ.செ.வில்வநாதன் குட்டகிந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். அ.ம.மு.க. வேட்பாளர் ஆர்.பாலசுப்பிரமணி, புதுகோவிந்தாபுரத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஓட்டு போட்டார்.

ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரம் பாவடிதோப்பு பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அப்போது வாக்குப்பதிவு எந்திரம் செயல்படவில்லை. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் புதிய எந்திரத்தை வரவழைத்து சுமார் 50 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

இதேபோல் நாகேஸ்வரன் கோவில் எதிரே உள்ள வாக்குச்சாவடியிலும் 30 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. தோளபள்ளி கிராமத்தில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது காரணமாக அங்கும் 30 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குப்பதிவை முன்னிட்டு ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்,

மாலை 5 மணி நிலவரப்படி குடியாத்தம் (தனி) சட்டசபை இடைத்தேர்தலில் 60.49 சதவீதமும், ஆம்பூர் சட்டசபை இடைத்தேர்தலில் 61.84 சதவீதமும், சோளிங்கர் சட்டசபை இடைத்தேர்தலில் 62.67 சதவீதமும் என 3 சட்டசபை இடைத்தேர்தலில் 61.5 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளன என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story