தமிழக மக்களிடையே எழுச்சி: 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் தர்மபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி


தமிழக மக்களிடையே எழுச்சி: 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் தர்மபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 19 April 2019 4:30 AM IST (Updated: 18 April 2019 11:57 PM IST)
t-max-icont-min-icon

தமிழக மக்கள் எழுச்சியுடன் வாக்களித்து இருப்பதால் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று தர்மபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேட்டூர், மேச்சேரி, தர்மபுரி, மதிகோன்பாளையம், இண்டூர், பி.எஸ்.அக்ரஹாரம், நாகதாசம்பட்டி, தாளப்பள்ளம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, காரிமங்கலம், திப்பம்பட்டி, கம்பைநல்லூர், வகுரப்பம்பட்டி, முருக்கம்பட்டி, ஒடசல்பட்டி, சோலைக்கொட்டாய், ராஜாபேட்டை உள்ளிட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளை அவர் பார்வையிட்டு வாக்குப்பதிவு சதவீதம் குறித்து கேட்டறிந்தார். தர்மபுரி அன்னசாகரத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வலிமையான இந்தியாவையும், வளமையான தமிழகத்தையும் உருவாக்கும் நோக்கத்துடன் அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மெகா கூட்டணிக்கு தொடக்கத்தில் இருந்தே மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று உள்ளது. பொதுமக்கள் எழுச்சியுடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு வந்து வாக்களித்து உள்ளனர். இதன்மூலம் அ.தி.மு.க. கூட்டணிக்கு தங்கள் ஆதரவை வழங்கி இருக்கிறார்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

மத்தியிலும், மாநிலத்திலும் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதன்மூலம் நரேந்திரமோடி மீண்டும் பிரதமராவார். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும். இந்த தேர்தலில் விவசாயிகள், தொழிலாளர்கள், பாட்டாளிகள் எங்கள் அணியாகவும், சாராய ஆலை அதிபர்கள், பெரும் முதலாளிகள் தி.மு.க. தலைமையிலான அணியாகவும் போட்டியிட்டனர்.

விவசாயத்தை பாதுகாக்க நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு விவசாயிகள், பொதுமக்களிடையே மிகப்பெரிய ஆதரவு கிடைத்து உள்ளது. கோதாவரி-காவிரி ஆறுகளை இணைப்பதன் மூலம் தமிழகத்திற்கு 200 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். இதன் மூலம் தமிழகத்தில் 25 மாவட்டங்கள் செழிப்படையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பா.ம.க. மாநில துணைபொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், அ.தி.மு.க. நகர செயலாளர் குருநாதன், முன்னாள் நகர துணை செயலாளர் பூக்கடை ரவி, பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் நம்பிராஜன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story