சென்னை புதுப்பேட்டையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத ஏக்கத்தில் மூதாட்டி உயிரிழப்பு


சென்னை புதுப்பேட்டையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத ஏக்கத்தில் மூதாட்டி உயிரிழப்பு
x
தினத்தந்தி 19 April 2019 4:30 AM IST (Updated: 19 April 2019 12:00 AM IST)
t-max-icont-min-icon

இந்திய நாடாளுமன்றத்துக்கு 2-வது கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு நேற்று நடந்தது.

சென்னை,

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட செயின்ட் அந்தோணி பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த சிசிலி முரால் (வயது 74) என்ற மூதாட்டி நேற்று காலை 10 மணிக்கு வந்தார். வாக்குச்சாவடி மையத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிசிலி முராலிடம் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்று தெரிவித்து அவரை ஓட்டு போட அனுமதிக்கவில்லை.

இதனால், மிகுந்த ஏமாற்றம் அடைந்த சிசிலி முராலி, தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம், “நான் உயிரோடு இருக்கும் போதே செத்துவிட்டதாக நினைத்து விட்டீர்களா?” என்று ஆதங்கத்துடன் கூறிவிட்டு வீட்டுக்கு திரும்பி உள்ளார்.

பின்னர், வீட்டுக்கு வந்து தனது மகன் அமுதனிடம் தன்னால் வாக்களிக்க முடியாத நிலை குறித்து தெரிவித்து உள்ளார். அதைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் சிசிலி முரால் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த டாக்டர் ஒருவர் அழைத்து வரப்பட்டார். சிசிலி முராலை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து எழும்பூர் போலீசார் மற்றும் அந்த பகுதி தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story