திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி தர்ணா செய்த நரிக்குறவர்கள்


திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி தர்ணா செய்த நரிக்குறவர்கள்
x
தினத்தந்தி 19 April 2019 4:45 AM IST (Updated: 19 April 2019 12:10 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தங்கள் பெயரை கூறி ஓட்டுக்கு பணம் வாங்கியவர்களை கைது செய்யக்கோரி நரிக்குறவர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவெறும்பூரில் உள்ளது தேவராயநேரி பகுதி. இங்குள்ள நரிக்குறவ காலனியில் நரிக்குறவ இன மக்கள் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த மக்களுக்காக இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு வாக்குச்சாவடியில் மொத்தம் 835 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 10.30 மணி நிலவரப்படி 26 பேர் மட்டுமே வாக்களித்து இருந்த னர். மீதம் உள்ளவர்கள் வாக்களிக்க வராமல் வாக்குச்சாவடிக்கு அருகில் உள்ள மரத்தடியில் நின்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, எங்கள் பெயரை கூறி, இங்குள்ள சிலர் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிச்சென்றுவிட்டனர். ஆனால் எங்களுக்கு பணம் எதுவும் வரவில்லை. வாக்களிக்க பணம் கொடுப்பது தவறு. அதனால் எங்களுக்கு பணம் தேவையில்லை. மாறாக எங்கள் பெயரை கூறி ஓட்டுக்கு பணம் வாங்கியவர்களை கைது செய்யவேண்டும். அதுவரை வாக்களிக்க வரமாட்டோம் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுபற்றி திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் சிவராசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர், இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி துவாக்குடி போலீசாருக்கு உத்தரவிட்டார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, உங்கள் பெயரை கூறி பணம் வாங்கி சென்றவர்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக புகார் கொடுங்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். தேர்தலை புறக்கணிக்க வேண்டாம். போராட்டத்தை கைவிட்டு வாக்களிக்க செல்லுங்கள் என்று போலீசார் கூறினர். இதை ஏற்றுக்கொண்ட அவர்கள் போராட்டத்தை கைவிட்டு வாக்களிக்க சென்றனர். அந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அவர்கள் நிருபர்களிடம் கூறும்போது, ‘நரிக்குறவ இன மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதி இந்த தேவராயநேரி, எங்கள் பகுதிக்கு எந்த ஒரு பெரிய அரசியல் கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் ஓட்டு கேட்டு வருவது கிடையாது. நரிக்குறவர்கள் தானே பணம் கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவார்கள் என்று அவர்களின் எண்ணம். அதன்படி இந்த முறையும் யாரும் எங்கள் பகுதிக்கு ஓட்டுக்கேட்டு வரவில்லை. இதனால் எங்கள் பகுதிக்கு தேவையான குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடிவதில்லை. எனவே எங்கள் பெயரை கூறி பணம் வாங்கியவர்களை கைது செய்ய வேண்டும்’ என்றனர்.

Next Story