திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியில் ‘கள்ள ஓட்டு’ போட்டதால் அதிர்ச்சி, வாக்குச்சாவடி மையத்தை தே.மு.தி.க.வினர் முற்றுகை-பரபரப்பு
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியில் ‘கள்ள ஓட்டு’ போட்டதால் அதிர்ச்சியடைந்த தே.மு.தி.க.வினர் வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. திண்டுக்கல் நகர், புறநகர் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையங்களில் காலை முதலே வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களித்தனர். இந்த நிலையில் திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி கென்னடி நினைவு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் காலை முதலே வாக்குப்பதிவு தொடங்கி நடந்து கொண்டிருந்தது. ஒய்.எம்.ஆர்.பட்டி, கோபால்நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாக்காளர்கள் அந்த மையத்துக்கு வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்து சென்றனர்.
இந்த நிலையில், திண்டுக்கல் கோபால்நகரை சேர்ந்தவர் குழந்தை. மினரல் வாட்டர் ஏஜென்சி நடத்தி வரும் இவர் தே.மு.தி.க.வில் பகுதி கழக அவைத்தலைவராக உள் ளார். இவருடைய மனைவி குழந்தை தெரஸ் (வயது 38). நேற்று மாலை 4.15 மணி அளவில் இவர், வாக்களிப்பதற்காக கணவருடன் கென்னடி நினைவு மாநகராட்சி தொடக் கப்பள்ளிக்கு வந்தார். பின்னர் வாக்குப்பதிவு செய்வதற்காக தேர்தல் அலுவலர்களிடம் தனது ‘பூத் சிலிப்’ மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை அவர் காண்பித்தார்.
அவற்றை ஆய்வு செய்த தேர்தல் அலுவலர்கள் காலையிலேயே அவருக்கான வாக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தை தெரஸ், தற்போது தான் வாக்குப்பதிவு செய்வதற்கு வருவதாக தேர்தல் அலுவலர்களிடம் தெரிவித்தார். மேலும் காலையில், அவருடைய பெயரில் வாக்குப்பதிவு செய்தவரின் கையொப்பம், சமர்ப்பித்த ஆவணங்களை காண்பிக்குமாறு தேர்தல் அலுவலர்களிடம் குழந்தை தெரஸ் கேட்டார்.
பின்னர் அவருக்கு அந்த ஆவணங்கள் காண்பிக்கப்பட்டது. அதனை பார்த்த போது தான் யாரோ ‘கள்ள ஓட்டு’ போட்டுச்சென்றது குழந்தை தெரசுக்கு தெரியவந்தது. இதையடுத்து தன்னிடம் உள்ள ‘பூத்சிலிப்’, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை தேர்தல் அலுவலர்களிடம் குழந்தை தெரஸ் காண்பித்தார். அதனை தேர்தல் அலுவலர்கள் ஆய்வு செய்த போது, அவர் தான் குழந்தை தெரஸ் என்பது தெரியவந்தது. இதற்கிடையே தகவலறிந்த தே.மு.தி.க.வினர் அந்த வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டு தேர்தல் அலுவலர் களிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ‘டெண்டர் பேலட்’ முறையில் குழந்தை தெரஸ் வாக்குப்பதிவு செய்ய தேர்தல் அலுவலர்கள் அனுமதித்தனர்.
தொடர்ந்து அவரும் தனது வாக்கை பதிவு செய்தார். குழந்தை தெரஸ் பெயரில் ‘கள்ள ஓட்டு’ போடப்பட்டதா? என்று தேர்தல் அலுவலர்களிடம் கேட்ட போது, குழந்தை தெரஸ் சமர்ப்பித்த ஆவணங் கள் அடிப்படையில் அவருக்கு ‘டெண்டர் பேலட்’ முறையில் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. பதிவான இரண்டு வாக்குகளில் எதனை எடுத்துக்கொள்வது என்ற முடிவை தேர்தல் ஆணையமே எடுக்கும் என்றனர்.
Related Tags :
Next Story