விழுப்புரத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல பஸ்கள் இல்லாததால் பயணிகள் சாலை மறியல்


விழுப்புரத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல பஸ்கள் இல்லாததால் பயணிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 April 2019 3:30 AM IST (Updated: 19 April 2019 12:11 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல பஸ்கள் இல்லாததால் பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் தங்கி வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திலும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆனால் சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் சென்னையில் இருந்தே பயணிகள் கூட்டம் நிரம்பியதால் அந்த பஸ்கள் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லாமல் புறவழிச்சாலை வழியாக சென்றது.

இதனால் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு செல்ல வேண்டிய பயணிகள், பஸ்கள் இல்லாமல் பல மணி நேரம் காத்திருந்தனர். மேலும் சேலம், ஈரோடு, வேலூர், நாமக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு போதுமான பஸ்கள் இயக்கப்படாததால் அந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் அவதியடைந்தனர்.

அவ்வப்போது விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்குள் ஒன்றிரண்டு பஸ்கள் மட்டுமே வந்தன. அந்த பஸ்களிலும் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு பஸ்களில் ஏறினர். பலர் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியவாறும், மேற்கூரையில் அமர்ந்தவாறும் ஆபத்தான பயணம் மேற்கொண்டதை காண முடிந்தது.

இந்த நிலைமை நேற்று காலை 8 மணி வரை விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நீடித்தது. இதுபற்றி பயணிகள் சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளையும் மற்றும் போலீசாரை தொடர்பு கொண்டும் கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி முறையிட்டனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் 200-க்கும் மேற்பட்டோர் காலை 8.15 மணியளவில், பஸ் நிலையத்தின் நுழைவுவாயில் முன்பு திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் கோட்டாட்சியர் குமாரவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார், பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், பஸ்கள் உடனடியாக இயக்கப்பட்டால்தான் மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறியபடி அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளை போலீசார், தொடர்பு கொண்டதன்பேரில் விழுப்புரம் போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து திருச்சி செல்ல ஒரே நேரத்தில் 3 பஸ்கள் வரவழைக்கப்பட்டன. அந்த பஸ்சில் பெரும்பாலான பயணிகள் ஏறி பயணம் செய்தனர்.

அதேபோல் மதுரை, திருநெல்வேலி, சேலம், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட இடங்களுக்கும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் வரவழைக்கப்பட்டு இயக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பஸ்சில் ஏறி பயணம் செய்தனர். இருந்தபோதிலும் நேற்று மதியம் 2 மணி வரை பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இந்த திடீர் மறியல் காரணமாக சுமார் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story