நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைப்பு - சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன
நாடாளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
விழுப்புரம்,
நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து தகுதியுள்ள வாக்காளர்களும் வாக்களிக்க ஏதுவாக தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து விதமான தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து தொழிற்சாலைகளிலும் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல் வியாபாரிகள் அனைவரும் தாங்கள் மற்றும் தங்கள் கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக கடைகளுக்கு விடுமுறை விட்டிருந்தனர்.
இதனால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான கடைகள் மூடிக்கிடந்தன. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு டீக்கடைகள், மருந்து கடைகள் மட்டும் வழக்கம்போல் திறந்திருந்தன. விழுப்புரம் நகரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்ததால் எப்போதும் பரபரப்பாகவும், மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் சாலைகளான விழுப்புரம்- புதுச்சேரி சாலை, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, திரு.வி.க. சாலை, காமராஜர் சாலை, கே.கே.சாலை உள்ளிட்ட சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.
இதேபோல் உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக்கோவிலூர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், வானூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
Related Tags :
Next Story