தார் தயாரிக்கும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி - தேர்தலை புறக்கணித்து கிராம மக்கள் போராட்டம்
ரெட்டியார்சத்திரம் அருகே தார் தயாரிக்கும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி தேர்தலை புறக்கணித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னிவாடி,
ரெட்டியார்சத்திரம் அருகேயுள்ள காமாட்சிபுரத்தில் தனியாருக்கு சொந்தமான தார் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்படுகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையினால் காமாட்சிபுரம், ஆதிதிராவிடர் காலனி, கோட்டையூர், கோட்டைப்பட்டி ஆகிய கிராமங்களில் வசிப்பவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையினால் காமாட்சிபுரம் பகுதியில் உள்ள வீடுகளில் தூசி படிகிறது. மேலும் இந்த நச்சுப்புகையால் பாதிப்புக்குள்ளாகி இதுவரை 9 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அந்த தொழிற்சாலையை மூடக்கோரி கடந்த 15-ந்தேதி கிராம மக்கள் திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில் அந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி கிராம மக்கள் கடந்த 4 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு போலீசார் அங்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடும் ஏதும் ஏற்படாததால் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். உடனே போலீசார் போராட்டத்துக்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலின் மின் இணைப்பை துண்டித்தனர். அதனையும் பொருட்படுத்தாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் நாடாளுமன்ற தேர்தலை நேற்று புறக்கணித்தனர். நச்சுப்புகையை வெளியேற்றும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story