நெல்லை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்


நெல்லை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்
x
தினத்தந்தி 19 April 2019 4:00 AM IST (Updated: 19 April 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

நெல்லை, 

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

நாடாளுமன்ற தேர்தல்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. நெல்லை நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பை, ராதாபுரம், நாங்குநேரி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது. வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்றுமுன்தினம் இரவே அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்தனர். அவர்கள் நேற்று காலை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பொருத்தினர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு

பெரும்பாலான வாக்குச்சாவடிகளுக்கு காலை 6.30 மணி முதல் வாக்காளர்கள் வரத்தொடங்கினர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். நெல்லை மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, குறிச்சி மாநகராட்சி தொடக்கப்பள்ளி, ஆமீன்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, அம்பிகாபுரம் ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் காலை முதலே கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் பூத் சிலிப்புகளை வாங்கிக்கொண்டு வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுப்போடுவதற்கு வசதியாக சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டு இருந்தன. சில வாக்குச்சாவடிகளில் பிரெய்லி வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

நெல்லை டவுன் மந்திரமூர்த்தி மேல்நிலைப்பள்ளி, பாரதியார் உயர்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பொதுமக்களும், இளம் வாக்காளர்களும் ஆர்வமாக தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். ஐகிரவுண்டு காந்திமதி அம்மன் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 30 பார்வையற்றவர்கள் பிரெய்லி முறையில் வாக்களித்தனர். நெல்லை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. பல வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

கலெக்டர் ஓட்டு போட்டார்

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். அதே பள்ளியில் போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் வரிசையில் நின்று வாக்களித்தார். முத்துகருப்பன் எம்.பி. பாளையங்கோட்டை தியாகராஜநகர் ராம்நகர் பகுதியில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். விஜிலா சத்யானந்த் எம்.பி. பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் குடும்பத்துடன் வந்து ஓட்டு போட்டார்.

கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் நாடார் இந்து உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இன்பதுரை எம்.எல்.ஏ. திசையன்விளை அருகே நவ்வலடியில் உள்ள டி.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ. தெற்கு பாப்பான்குளம் பஞ்சாயத்து அலுவலக வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தச்சநல்லூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஓட்டு போட்டார். ராமநாதபுரம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள ஜெயேந்திர மேல்நிலைப்பள்ளில் குடும்பத்துடன் வந்து ஓட்டு போட்டார். நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு

நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியன் தனது சொந்த ஊரான சேரன்மாதேவி அருகே உள்ள கரிசல்பட்டியில் சி.எம்.எஸ்.டேவிட் நினைவு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதற்காக அவர் காலை 7 மணிக்கு வாக்குச்சாவடிக்கு வந்தார். அப்போது வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர் 45 நிமிடம் காத்திருந்து 7.45 மணிக்கு வாக்களித்தார். தொடர்ந்து முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் வாக்களித்தார்.

நெல்லை தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் தனது சொந்த ஊரான பணகுடி அருகே உள்ள ஆவரைகுளம் பாலையா மார்த்தாண்டம் தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடியில் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரில் உள்ள ஒய்.எம்.சி. நடுநிலைப்பள்ளியில் வரிசையில் நின்று ஓட்டு போட்டார். அ.ம.மு.க. வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் திசையன்விளை அருகே உள்ள குருகாபுரம் இந்து தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.

Next Story