தென்காசி தொகுதியில் அமைதியான வாக்குப்பதிவு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்


தென்காசி தொகுதியில் அமைதியான வாக்குப்பதிவு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்
x
தினத்தந்தி 18 April 2019 10:30 PM GMT (Updated: 18 April 2019 7:49 PM GMT)

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.

தென்காசி, 

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.

தென்காசி நாடாளுமன்ற தொகுதி

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் தென்காசி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அமைதியான முறையில் நடந்தது. தென்காசி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அ.ம.மு.க. வேட்பாளர் பொன்னுத்தாய், மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் முனீஸ்வரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதிவாணன், சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 25 பேர் போட்டியிட்டனர்.

தென்காசி தொகுதியில் 1,738 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. தென்காசி, பாவூர்சத்திரம், சுரண்டை, சங்கரன்கோவில், செங்கோட்டை உள்ளிட்ட ஊர்களில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது. மதியம் 2 மணிக்கு பிறகு வாக்காளர்கள் விறுவிறுப்பாக வந்து வாக்களித்தனர். வெயிலில் நிற்பதை தவிர்க்க சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. ஊனமுற்றவர்கள், வயதானவர்கள் வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு வசதியாக சக்கர நாற்காலி வசதி செய்து கொடுக்கப்பட்டது.

தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமார் தனது சொந்த தொகுதியான ராஜபாளையத்தில் உள்ள கோவிலூர் சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று காலை 7.10 மணிக்கு தனது வாக்கினை பதிவு செய்தார். அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர் பொன்னுத்தாய், ராஜபாளையம் தென்றல்நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதிவாணன் வாசுதேவநல்லூர் அருகே உள்ள ராயகிரி ராமசாமி தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர்.

அமைச்சர் ராஜலட்சுமி

அமைச்சர் ராஜலட்சுமி சங்கரன்கோவில் சங்கரநாரயண சுவாமி கோவில் ஆரம்ப பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் காலை 7.35 மணிக்கு வாக்களித்தார். வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன் விஸ்வநாதப்பேரி அருணோதயா நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியிலும், தென்காசி தொகுதி எம்.எல்.ஏ. செல்வமோகன்தாஸ் பாண்டியன், பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர்.

பாவூர்சத்திரம் அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெண் பணியாளர்கள் மட்டுமே பணியாற்றிய மகளிர் வாக்குச்சாவடி செயல்பட்டது. இங்கு பாதுகாப்பு பணியிலும் பெண் போலீசாரே ஈடுபட்டனர். சுரண்டை பேரன்புரூக் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. மதியத்திற்கு பிறகு பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். தமிழக- கேரள மாநில எல்லையான மேக்கரையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் காலை 6 மணிக்கு மக்கள் ஓட்டு போட தயாராக வந்து விட்டனர். அங்கு விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.

இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களை சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு காலை 7.20 மணிக்கு தொடங்கியது. உடனே அங்குள்ள அரசியல் கட்சி பூத் ஏஜெண்டுகள், 20 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கி உள்ளதால் மாலையில் கூடுதலாக 20 நிமிடம் தரவேண்டும் என்று கூறினார்கள். அதை வாக்குச்சாவடி அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதேபோல் பண்மொழி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் வாக்குப்பதிவு 15 நிமிடம் தாமதமாக தொடங்கியது. இந்த வாக்குச்சாவடி பதற்றமான வாக்குச்சாவடி என்பதால் இங்கு துணை ராணுவத்தினரும், கூடுதல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சுரண்டை பேரன்புரூக் மேல்நிலைப்பள்ளி, மேக்கரை அரசு நடுநிலைப்பள்ளி, மாறாந்தை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர். மேக்கரை வாக்குச்சாவடியில் புதிய வாக்காளரான கல்பா, தனது முதல் ஓட்டை போட காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து விட்டார். அவர் 5-வது ஆளாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.

எந்திர கோளாறு

தென்காசி காட்டுபாவா பள்ளி, முஸ்தபியா நடுநிலைப்பள்ளி, மஞ்சம்மாள் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் ஆண்களும், பெண்களும் அதிக அளவில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். பெண்கள் பலர் கைக்குழந்தைகளுடன் வாக்களிக்க வந்தனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடக்க முடியாதவர்களுக்கு இருசக்கர வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தென்காசி சிந்தாமணி வாக்குச்சாவடியில் எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் சுமார் அரை மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது. பின்னர் அதிகாரிகள் அதனை சரிசெய்தனர். புல்லுக்காட்டு வலசை அரசு உயர் நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் காலையில் எந்திர கோளாறு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் செய்யப்பட்டது. சுமார் ஒரு மணி நேரமாக வாக்காளர்கள் வரிசையில் காத்து நின்றனர். அதிகாரிகள் வந்து கோளாறை சரிசெய்த பிறகு தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. தென்காசி தொகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்காக ஆயுதப்படை போலீசார், துணை ராணுவத்தினரும் வாகனத்தில் சுற்றிக்கொண்டே இருந்தனர்.

Next Story