35 வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பழுது வாக்காளர்கள் தர்ணா போராட்டம்


35 வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பழுது வாக்காளர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 19 April 2019 3:30 AM IST (Updated: 19 April 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் 35 வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் பழுதானதால் ஓட்டுப்பதிவு சிறிது நேரம் தாமதமானது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் 35 வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் பழுதானதால் ஓட்டுப்பதிவு சிறிது நேரம் தாமதமானது.

நாடாளுமன்ற தேர்தல்

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், கடையநல்லூர், தென்காசி, வாசுதேவநல்லூர் (தனி), நாங்குநேரி, அம்பை, ராதாபுரம், சங்கரன்கோவில் (தனி) ஆகிய 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இந்த 10 சட்டசபை தொகுதிகளுக்கும் மொத்தம் 7 ஆயிரத்து 158 மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், 3 ஆயிரத்து 579 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 4 ஆயிரத்து 146 யாருக்கு ஓட்டு அளித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. பல வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டன. அதை என்ஜினீயர்கள் அவ்வப்போது சரிசெய்தனர்.

எந்திரங்களில் கோளாறு

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு காந்திமதி அம்மன் பள்ளி வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கே ஓட்டுப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அதனை என்ஜினீயர்கள் சரி செய்தனர். பின்னர் 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் வாக்குப்பதிவு தொடங்கும்போது எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வாக்காளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அதிகாரிகள் அங்கு வந்து ஓட்டுப்பதிவு எந்திரத்தை சரி செய்தனர். இதனால் 30 நிமிடம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்தில் ஓட்டுப்பதிவு எந்திரம் திடீரென பழுதடைந்தது. அங்கு அதிகாரிகள் வந்து எந்திரத்தை சரி செய்தனர். இதனால் 30 நிமிடம் தாமதமாக தொடங்கியது.

களக்காடு

களக்காடு அருகே மஞ்சுவிளை டி.டி.டி.ஏ. பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே எந்திரம் பழுதானது. அதிகாரிகள் வந்து சரிசெய்த பின்னர் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதேபோல் படலியார்குளம் கோமதி அருள்நெறி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் எந்திரங்கள் கோளாறு ஆனதால், வாக்குப்பதிவு 30 நிமிடங்கள் தாமதமாக 7.30 மணிக்கு தொடங்கியது. மேலக்காடுவெட்டி வாக்குச்சாவடியில் காலை 11 மணிக்கு எந்திரம் பழுதானது. பின்னர் புதிய எந்திரம் கொண்டுவரப்பட்டு மதியம் 12 மணிக்கு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

ஆலங்குளம் அருகே புதுப்பட்டியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. இங்குள்ள ஓட்டுப்பதிவு எந்திரம் வேகம் குறைவாக இருந்ததால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஓட்டுப்போட்டனர். இதனால் இங்கு இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இதேபோல் பேட்டையிலும் இரவு வரை வாக்குப்பதிவு நடந்தது. இதனால் வாக்காளர்கள் அவதி அடைந்தனர்.

35 வாக்குச்சாவடி மையங்கள்

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 35 வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானது. இதனால் ஓட்டுப்பதிவில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது.

Next Story