நல்லாட்சி அமைய அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும் இளம் வாக்காளர்கள் பேட்டி
நல்லாட்சி அமைய அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும் என்று இளம் வாக்காளர்கள் கூறினர்.
நெல்லை,
நல்லாட்சி அமைய அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும் என்று இளம் வாக்காளர்கள் கூறினர்.
இளம் வாக்காளர்கள்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நெல்லை தொகுதியில் ஏராளமான இளம் வாக்காளர்கள் தங்கள் முதல் வாக்கினை நேற்று பதிவு செய்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி மாஷா (வயது 19) கூறும்போது, “நான் முதன் முதலில் ஓட்டு போட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது ஜனநாயக கடமையை ஆற்ற ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஓட்டு போடும்போது ஜனநாயகத்தில் நமக்கும் பொறுப்பு உள்ளது என்பதை காட்டுகிறது“ என்றார்.
கல்லூரி மாணவி நிகிதா (19) கூறும்போது, “ஓட்டு போடும்போது எனக்கு சமுதாயத்தின் மீது அக்கறை ஏற்படுகிறது. நல்ல ஆட்சி மலர எனது ஓட்டும் பங்களிப்பாக இருக்கும் என நம்புகிறேன். ஒவ்வொரு வாக்காளர்களும் அந்தந்த தொகுதியில் நல்ல வேட்பாளரை தேர்வு செய்து வாக்களிக்க வேண்டும்“ என்றார்.
நல்ல ஆட்சி அமைய...
என்ஜினீயரிங் பட்டதாரி நிவேதா (22) கூறும்போது, “நான் 2 ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தேன். ஆனால் இந்த ஆண்டுதான் என் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. முதன் முதலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஓட்டு போட்டேன். எப்படி போடுவது என்று தெரியவில்லை. அங்குள்ள தேர்தல் அலுவலர்கள் சொல்லி கொடுத்தனர். அதன்படி ஓட்டு போட்டேன். நான் எந்த சின்னத்துக்கு வாக்களித்தேன் என்பதை எந்திரத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். இது ஒரு வித்தியாசமான அனுபவம். எனது ஜனநாயக கடமை ஆற்றியதை மகிழ்ச்சியாக கருதுகிறேன்“ என்றார்.
பட்டதாரி சோமசுந்தரி (21) கூறும்போது, “படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்கிறார்கள். எங்களுக்கு தற்போது தான் ஓட்டுரிமை கிடைத்துள்ளது. நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்து, திறமையான ஆட்சி அமைய உறுதுணையாக இருப்போம். மக்களுக்கு எந்த கட்சி நன்மை செய்கிறது என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். நமது ஓட்டுதான் இந்திய நாட்டின் பிரதமரை நிர்ணயம் செய்கிறது என்பதை மறந்துவிட கூடாது“ என்றார்.
எம்.பி.ஏ. பட்டதாரி நிஷா (24) கூறும்போது, “எனது ஓட்டு நல்ல ஆட்சி அமைய உறுதுணையாக இருக்கும். ஒவ்வொரு வாக்காளர்களும் நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்து, வாக்களிக்க வேண்டும். படித்த அனைவரும் வாக்களிக்க முன்வரவேண்டும். ஓட்டு சதவீதம் ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் அனைவரும் வாக்களிக்க முன்வரவேண்டும். அப்போது தான் நாட்டில் நல்ல ஆட்சி அமையும்“ என்றார்.
பாளையங்கோட்டை மகாராஜ நகரை சேர்ந்த பி.டெக் மாணவிகள் காயத்ரி (20), கவுரி (18) ஆகியோர் ஐகிரவுண்டு காந்திமதி அம்மன் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டனர். முதன் முதலில் ஓட்டுப்போட்ட அவர்கள் தங்க ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story