நெல்லை மாவட்டத்தில் கோவில்களில் சித்திரை திருவிழா தேரோட்டம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.
சங்கரன்கோவில்,
நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.
சங்கரன்கோவில்
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பிரமோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருதல் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதைமுன்னிட்டு காலை 7.40 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 9.25 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. சங்கரன்கோவில் மற்றும் சேர்ந்தமரம், குருக்கள்பட்டி, பனவடலிசத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
குருவிகுளம்
குருவிகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகளும், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலாவும் நடந்தது.
நேற்று காலை 10 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். மதியம் 1 மணிக்கு அரண்மனை வாசல் தெருவில் தேர் நிறுத்தப்பட்டது. பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு, நான்கு ரதவீதிகளில் வலம் வந்து 5 மணிக்கு மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
கல்லிடைக்குறிச்சி
கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 7 மணிக்கு சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளினர். 8 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ. வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தேரானது நான்கு ரதவீதிகள் வழியாக வந்து 10.45 மணிக்கு நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவில் சுவாமி, அம்பாள் பல்லக்கில் வீதிஉலா நடைபெற்றது.
கடையம் வில்வவனநாதர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை, வீதிஉலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை தொடங்கியது. தேரை பக்தர்கள் இழுத்து சார்பதிவாளர் அலுவலகம் அருகில் நிறுத்தினர். தொடர்ந்து மாலை தேரை வடம் பிடித்து நிலையத்திற்கு கொண்டுவந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் ராமசாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story