ஓட்டுப்போட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆர்வம் ஈரோட்டில் 102 வயது மூதாட்டி வாக்களித்தார்


ஓட்டுப்போட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆர்வம் ஈரோட்டில் 102 வயது மூதாட்டி வாக்களித்தார்
x
தினத்தந்தி 19 April 2019 3:00 AM IST (Updated: 19 April 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலில் ஓட்டு போடுவதற்கு முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் ஆர்வமாக வந்தனர். ஈரோட்டில் 102 வயது மூதாட்டி வாக்களித்தார்.

ஈரோடு,

தேர்தலில் ஓட்டு போடுவதற்காக வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்றனர். இதில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் வரிசையில் காத்திருக்காமல் நேரடியாக சென்று ஓட்டு போட வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் அறிவித்து இருந்தார். அதன்படி முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் பலர் ஆர்வமாக சென்று வாக்களித்தனர். ஈரோடு செம்மாம்பாளையத்தை சேர்ந்த குமாரின் மனைவியான அருக்காணி (வயது 102) என்பவர் செங்கோடம்பள்ளம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பகல் 11.15 மணிஅளவில் வாக்களிப்பதற்காக வந்தார். அவர் ஊன்றுகோல் உதவியுடன் வாக்குச்சாவடி மையத்தில் நடந்து சென்றார். அங்கு ‘பூத் சிலிப்’ மற்றும் ஆதார் அடையாள அட்டையை காண்பித்து தனது வாக்கை பதிவு செய்தார்.

வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு வசதியாக சக்கர நாற்காலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பலர் வீடுகளில் இருந்து ஆட்டோவில் வந்து தங்களது வாக்குகளை ஆர்வமாக பதிவு செய்தனர். திண்டல் செங்கோடம்பாளையம் சக்திநகர் பகுதியை சேர்ந்த 97 வயது முதியவர் ஜோசப் தனது வாக்கினை அளித்தார். இதுபோல் வெள்ளபெத்தாம்பாளையம் பகுதியை சேர்ந்த முதியவர் என்.ஜி.முத்து என்பவர் வாக்களித்தார்.

நடக்க முடியாமல் சிரமப்படும் முதியவர்கள் பலர் தங்களது உறவினர்கள் ஆதரவுடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்தனர். ஒரு சில இடங்களில் ஆட்டோக்களில் வந்து இறங்கிய மூதாட்டிகளை உறவினர்கள் தூக்கி சென்று வாக்குச்சாவடி மையத்துக்கு கொண்டு சென்றுவிட்டனர். மேலும், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் முதியவர்களின் கைகளை பிடித்துக்கொண்டு ஓட்டு போடும் அறைக்கு அழைத்து சென்றதையும் காண முடிந்தது.

ஈரோடு செங்கோடம்பள்ளம் அரிமா ஆதரவற்றோர் பள்ளியை சேர்ந்த 5 பேர் வாக்குப்பதிவு செய்ய ஆர்வமாக இருந்தனர். இதனால் அந்த பள்ளியின் நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவனிடம் வாகன வசதி ஏற்படுத்தி கொடுக்க உதவி கேட்டனர். அவருடைய உத்தரவின்பேரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் ஒரு ஆம்புலன்ஸ் தயார் செய்து கொடுத்தனர். அதைத்தொடர்ந்து ஒரு பார்வையற்ற பெண் உள்பட மொத்தம் 5 பேர் ஆம்புலன்சில் ஏறி சென்று செங்கோடம்பள்ளம் அரசு பள்ளிக்கூட வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

Next Story