வரிசையில் நின்று வாக்களித்த அ.தி.மு.க.-தி.மு.க. வேட்பாளர்கள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் வாக்களித்தார்


வரிசையில் நின்று வாக்களித்த அ.தி.மு.க.-தி.மு.க. வேட்பாளர்கள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் வாக்களித்தார்
x
தினத்தந்தி 19 April 2019 4:00 AM IST (Updated: 19 April 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வேட்பாளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தனது மனைவி மற்றும் மகளுடன் சென்று வாக்களித்தார்.

உடுமலை,

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட உடுமலை சட்டமன்றத்தொகுதியில் மொத்தம் 293 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் 59 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புக்காக போலீசார், அதிரடிப்படை போலீசார், மற்றும் ஊர்க்காவல் படையினர் கூடுதலாக பணியமர்த்தப்பட்டிருந்தனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தனது மனைவி மற்றும் மகளுடன் உடுமலை-தாராபுரம் சாலையில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று சென்று வாக்களித்தார். வாக்களித்து விட்டு வெளியே வந்ததும் வாக்களித்தற்கு அடையாளமாக விரலில் மை வைத்துள்ளதை காட்டினார். பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சி.மகேந்திரன் உடுமலை சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட மூங்கில்தொழுவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடிக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் வந்து வரிசையில் நின்று சென்று வாக்களித்தார். அவர்கள் வாக்களித்து விட்டு வெளியே வந்ததும் தாங்கள் வாக்களித்ததற்கு அடையாளமாக விரலில் மை வைக்கப்பட்டிருந்தை காட்டினர். நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.தியாகராஜன் சேவூர் அருகே முதலிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஈரோடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற மணிமாறன், காங்கேயம் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை நேற்று காலை 8.15 மணிக்கு பதிவு செய்தார்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் சண்முக சுந்தரம், தனது மனைவியுடன் பெருமாள்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

உடுமலை காந்திநகரில் உள்ள சீனிவாச வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி அலுவலர்களாக பெண்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர். அந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்களைக்கவரும் வகையில் வாக்குச்சாவடிக்கு வெளிப்புறம் ஸ்கிரீன் (திரைச்சீலை) அமைத்தும் பலூன்களை தொங்கவிட்டும், வாழை, தோரணங்கள் கட்டியும் அலங்கரித்து இருந்தனர்.

உடுமலை அருகில் உள்ள பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட சிவசக்தி காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் காலையில் இருந்தே வாக்காளர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று சென்று வாக்களித்தனர்.

மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டிருந்தன. மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்கு பகுதிக்கு வந்ததும் உதவியாளர்கள் அவர்களை சக்கர நாற்காலியில் உட்காரவைத்து சாய்தளத்தின் மூலம் வாக்குச்சாவடிக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு மாற்றுத்திறனாளிகள் வாக்களித்தனர். 

Next Story