சட்டையில் சின்னத்தை அணிந்து சென்றதால் வாக்குச்சாவடிக்குள் அ.தி.மு.க.- கம்யூனிஸ்டு கட்சியினர் திடீர் மோதல் திருப்பூரில் பரபரப்பு
திருப்பூரில் ஒரு வாக்குச்சாவடிக்குள் சட்டையில் சின்னத்தை அணிந்து சென்றதால் அ.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முருங்கம்பாளையம் ஈடன்கார்டனில் உள்ள வாக்குச்சாவடிக்கு நேற்று காலை 7.45 மணிக்கு வாக்களிக்க சென்றார். அப்போது அவருடன் அ.தி.மு.க. பிரமுகர்கள் தங்களது சட்டை பையில் இரட்டை இலை சின்னத்தை அணிந்து சென்றனர். அதே போல் வேட்பாளரும், இரட்டை இலை சின்னம் வெளியில் தெரியும்படி வைத்திருந்தார்.
இதற்கு அந்த பகுதியில் இருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஏஜெண்டு சக்திவேல் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அ.தி.மு.க. வேட்பாளரும், அவருடன் சென்றவர்களும் சின்னத்தை மறைக்காமல் வாக்குச்சாவடிக்குள் சென்றனர். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறி சின்னங்களை அணிந்து வாக்குச்சாவடிக்குள் செல்வது ஏற்புடையது அல்ல என அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலரிடம், சக்திவேல் புகார் செய்தார்.
ஆனாலும் வாக்குச்சாவடிக்குள் அ.தி.மு.க.வினர் சென்றதால், அ.தி.மு.க. பிரமுகர் ராஜேஷ் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பினரும் வாக்குச்சாவடிக்குள் திடீரென்று மோதிக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பிவைத்தனர். இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு வெளியே வந்தார்.
Related Tags :
Next Story