தூத்தூர் கிராமத்தில் பரபரப்பு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பொதுமக்கள் போராட்டம்


தூத்தூர் கிராமத்தில் பரபரப்பு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 April 2019 3:45 AM IST (Updated: 19 April 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

தூத்தூர் கிராமத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொல்லங்கோடு,

நித்திரவிளை அருகே தூத்தூர் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட மக்களுக்கு அப்பகுதியில் உள்ள பயஸ்லெவன் மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேல்நிலைப்பள்ளியில் 7 வார்டுகள், தொடக்கப்பள்ளியில் 6 வார்டுகள் என பிரிக்கப்பட்டு இருந்தன. நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

ஆனால், சிறிது நேரத்தில் எந்திரங்கள் கோளாறு ஏற்பட்டது. அதைதொடர்ந்து அதிகாரிகள் வேறு எந்திரங்களை கொண்டு வந்து மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது. இதனால், அங்கு 2 மணிநேரம் தாமதமானது.

மீனவ கிராமத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் ஓட்டுப்போட வாக்காளர் அடையாள அட்டையுடன் அங்கு வந்தனர். அவர்களில் பலருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இல்லை என்று ஓட்டுப்போட முகவர்கள் அனுமதிக்க மறுத்தனர். நேரம் செல்லச்செல்ல பட்டியலில் பெயர்கள் இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போனது.

இதனால், ஆத்திரமடைந்த மக்கள் வாக்குச்சாவடி வளாகத்தின் முன் அமர்ந்து ஓட்டுரிமை அளிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கிள்ளியூர் தாசில்தார் கோலப்பன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும், உடன்பாடு ஏற்படவில்லை. மேலும், அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்றால் வாக்குப்பதிவு எந்திரத்தை வெளியே கொண்டு செல்ல விடமாட்டோம் என்று கூறினர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயபாஸ்கர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளவர்கள் பெயர் விவரத்தை மனுவாக எழுதி போலீஸ் நிலையத்தில் அளிக்கும்படி கூறினார். பின்னர், அந்த மனுவை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முன் சலுகை முறையில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story