மண்டியாவில் சுமலதாவை தோற்கடிக்க ரூ.150 கோடி செலவு குமாரசாமி மீது எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டு


மண்டியாவில் சுமலதாவை தோற்கடிக்க ரூ.150 கோடி செலவு குமாரசாமி மீது எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 April 2019 3:30 AM IST (Updated: 19 April 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

மண்டியாவில் சுயேச்சை வேட்பாளர் சுமலதாவை தோற்கடிக்க ரூ.150 கோடி செலவு செய்துள்ளதாக குமாரசாமி மீது எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

பெங்களூரு, 

மண்டியாவில் சுயேச்சை வேட்பாளர் சுமலதாவை தோற்கடிக்க ரூ.150 கோடி செலவு செய்துள்ளதாக குமாரசாமி மீது எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

ராகுல் காந்தி யார்?

பாகல்கோட்டையில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா கலந்துகொண்டு பேசியதாவது:-

அம்பேத்கரை தேர்தலில் தோற்கடித்த காங்கிரசுக்கு அவரை பற்றி பேச தகுதி இல்லை. முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன்ராமுக்கு காங்கிரஸ் அநீதி இழைத்தது. இந்த ராகுல் காந்தி யார்?. பிரதமரை ஒருமையில் பேசும் தைரியம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?. ராகுல் காந்திக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

பணபட்டுவாடா

பா.ஜனதா வேட்பாளர்கள் கத்திகவுடர், ரமேஷ் ஜிகஜினகி ஆகியோரை 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். மண்டியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சுமலதாவை தோற்கடிக்க குமாரசாமி வாக்காளர்களுக்கு ரூ.150 கோடி செலவு செய்துள்ளார்.

இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஜனதா தளம்(எஸ்) கட்சி நிர்வாகிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். துமகூருவில் தேவேகவுடாவை வெற்றி பெற வைக்க ரூ.100 கோடி செலவு செய்துள்ளனர். அங்கு தேவேகவுடா தோற்பார்.

காப்பாற்ற முடியாது

ஹாசன் தொகுதியில் தனது மகனை வெற்றி பெற வைக்க மந்திரி எச்.டி.ரேவண்ணா அதிகளவில் செலவு செய்துள்ளார். அடிமட்டத்திற்கு இறங்கியுள்ள குமாரசாமியால், ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த கூட்டத்தில் ஈசுவரப்பா பேசுகையில், “நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்த கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும். இந்த அரசு இருக்கக்கூடாது என்பது போல் சித்தராமையா பேசி வருகிறார்” என்றார்.

Next Story