கோவையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டனர்


கோவையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டனர்
x
தினத்தந்தி 19 April 2019 4:30 AM IST (Updated: 19 April 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டனர்.

கோவை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரத்து 70 வாக்குச்சாவடிகளில் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்களிப்பதற்காக காலை 7 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதில் வாக்களித்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் விவரம் வருமாறு:-

கோவை நாடாளுமன்ற தொகுதி எம்.பி. ஏ.பி.நாகராஜன் கோவையை அடுத்த கோவில்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்றுக்காலை ஓட்டு போட்டார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மனைவி பானுமதி, மகன் சஞ்சீவ் ஆகியோருடன் வந்து வாக்களித்தார். தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கோவை உப்பிலிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்கு அளித்தார். அவருடன் மகன் பைந்தமிழ் பாரி, மகள் இந்து ஆகியோரும் வந்து வாக்களித்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ஜோதிபுரம் அரசு பள்ளி வாக்குச்சாவடியில் கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., பி.ஆர்.ஜி.அருண்குமாரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுனன் கோவை செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியிலும், கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி மனைவியுடன் வந்து விளாங்குறிச்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். கோவையை அடுத்த சின்னையா கவுண்டன் புதூர் வாக்குச்சாவடியில் எட்டிமடை சண்முகம் எம்.எல்.ஏ., வாக்களித்தார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. என்ஜினீயரிங் கல்லூரி வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்டார்.

ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் வாக்களித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் மாநில துணை தலைவரும். முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவை தங்கம் கோவை சாய்பாபாகாலனி குப்பகோணாம் புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மகன் கோவை விஷ்ணுவுடன் வந்து வாக்களித்தார்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆதிமாதையனூர் ஊராட்சி ஒன்றிய வாக்குச்சாவடியில் ஏ.கே.செல்வராஜ் எம்.பி., ஒசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் வாக்களித்தனர். 

Next Story