கோவை, சேலம் உள்பட பல்வேறு இடங்களில் சம்பவம், வாக்குச்சாவடிகளில் மயங்கி விழுந்து 6 பேர் சாவு


கோவை, சேலம் உள்பட பல்வேறு இடங்களில் சம்பவம், வாக்குச்சாவடிகளில் மயங்கி விழுந்து 6 பேர் சாவு
x
தினத்தந்தி 18 April 2019 11:15 PM GMT (Updated: 18 April 2019 9:43 PM GMT)

கோவை, சேலம் உள்பட பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடிகளில் மயங்கி விழுந்து 6 பேர் பரிதாபமாக இறந்தனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

கோவை,

கோவை கணபதி அருகே காந்திமாநகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 81). ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று காலை 9 மணியளவில் இவர் தனது மகன் தனசேகருடன் (51) அந்த பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு சென்றார். பின்னர் வாக்களிப்பதற்காக வரிசையில் காத்து நின்றார். அப்போது திடீரென பாலகிருஷ்ணன் மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தனசேகர் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெரியேரிப்பட்டி ஊராட்சி வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (76), அ.தி.மு.க. தொண்டர். இவர் நேற்று காலை 10 மணியளவில் வேடப்பட்டி அங்கன்வாடி மையத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு தனியாக வந்து ஓட்டு போட்டார். வெளியே வந்தபோது திடீரென மயங்கினார். உடனே அங்கிருந்த வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், கிருஷ்ணனை சோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள மசூதி தெருவை சேர்ந்தவர் முருகேசன் (66). இவருடைய மனைவி கனகாம்பாள் (60). இவர்களுடைய மகள் வனிதா (34), மகன் ராஜா (32).

முருகேசன் சிவகிரி கொடுமுடி ரோட்டில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று காலை 8.15 மணி அளவில் முருகேசன் சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஓட்டுப்போட சென்றார். அங்கு வரிசையில் நிற்பதற்காக படி ஏறினார். அப்போது திடீரென மயங்கி அருகே இருந்த தூணை பிடித்தபடி தரையில் விழுந்தார். உடனே வரிசையில் நின்ற பொதுமக்கள் சிலர் ஓடிவந்து அவரை மீட்டு அவரை சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் முருகேசனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபோல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே துரைச்சாமிபுரம்புதூரை சேர்ந்தவர் மொக்கச்சாமி. அவருடைய மனைவி முத்துப்பிள்ளை (90). இவர் நேற்று அந்த கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஓட்டுப்போட சென்றார்.

அங்கு ஓட்டு போட்டுவிட்டு முத்துப்பிள்ளை, வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்தார். சற்று நேரத்தில் அவர் திடீரென்று அங்கு மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் முத்துப்பிள்ளையை உடனடியாக சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சேலம் அன்னதானப்பட்டி சண்முகாநகரை சேர்ந்தவர் சந்திரபோஸ்(68), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தனது மகன் தமிழ்வாணனுடன் ஓட்டு போடுவதற்காக நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் லைன்மேடு பகுதியில் உள்ள குகை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

பின்னர் அவர்கள் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 100 மீட்டருக்கு வெளியே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வாக்குச்சாவடி மையத்திற்கு நடந்து சென்றனர். வாக்குச்சாவடி மையம் அருகில் சென்றபோது சந்திரபோஸ் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தமிழ்வாணன் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனைசெய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டம் வாலாஜாவை அடுத்த அனந்தலை குளத்து தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி துளசி (80), இவர் சற்று உடல்நிலை பாதிப்படைந்து இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் துளசி நேற்று அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அனந்தலை கிராமத்தில் பண்டித மாளவியா நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் ஓட்டு போடுவதற்காக வந்தார். சிறிதுநேரம் அங்கு அமர்ந்திருந்த துளசி திடீரென மயக்கமடைந்து உயிரிழந்தார். இவரது உடலுக்கு ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் அஞ்சலி செலுத்தினார். 

Next Story