கர்நாடகத்தில் முதல்கட்ட நாடாளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமை ஆற்றிய அரசியல் தலைவர்கள், நடிகர்-நடிகைகள்


கர்நாடகத்தில் முதல்கட்ட நாடாளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமை ஆற்றிய அரசியல் தலைவர்கள், நடிகர்-நடிகைகள்
x
தினத்தந்தி 18 April 2019 10:00 PM GMT (Updated: 18 April 2019 9:46 PM GMT)

கர்நாடகத்தில் முதல்கட்டமாக நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் அரசியல் தலைவர்கள், நடிகர்-நடிகைகள் ஜனநாயக கடமை ஆற்றினர்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் முதல்கட்டமாக நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் அரசியல் தலைவர்கள், நடிகர்-நடிகைகள் ஜனநாயக கடமை ஆற்றினர்.

14 தொகுதிகளுக்கு தேர்தல்

கர்நாடகத்தில் நேற்று முதல்கட்டமாக பெங்களூருவில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகள் உள்பட மொத்தம் 14 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் வாக்களித்தனர். அதன் விவரம் வருமாறு:-

அரசியல் தலைவர்கள்

ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா படுவலேஹிப்பே கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது மனைவி சென்னம்மாவுடன் சென்று வாக்களித்தார். ராமநகர் மாவட்டம் கேதனஹள்ளியில் முதல்-மந்திரி குமாரசாமி, அவருடைய மனைவி அனிதா, மகன் நிகில் குமாரசாமி ஆகியோர் ஜனநாயக கடமையை ஆற்றினர். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஜெயநகரிலும், மத்திய மந்திரி சதானந்தகவுடா பூபசந்திராவிலும் வாக்களித்தனர். துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தனது மனைவியுடன் சேர்ந்து துமகூரு மாவட்டம் சித்தார்த் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மைசூரு மாவட்டம் சித்தராமனஉண்டி கிராமத்திலும், வீரப்ப மொய்லி எம்.பி. சிக்பள்ளாப்பூரிலும், நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார், அவருடைய சகோதரரும், எம்.பி.யுமான டி.கே.சுரேஷ் ஆகியோர் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா தொட்டஆலஹள்ளி வாக்குச்சாவடியிலும் வாக்கு செலுத்தினர். மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பெங்களூரு சி.வி.ராமன் நகரிலும், முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டி, அவருடைய மகளும் எம்.எல்.ஏ.வுமான சவமியா ரெட்டி ஆகியோர் லக்கசந்திராவிலும் ஜனநாயக கடமை ஆற்றினர். மந்திரி ஜெயமாலா டாலர்ஸ் காலனி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

நடிகர்-நடிகைகள்

நடிகர்களான புனித் ராஜ்குமார், ரமேஷ் அரவிந்த், உபேந்திரா, சிவராஜ்குமார், சுதீப், தர்ஷன், யஷ், ஜக்கேஷ், கணேஷ் பிரேம், நடிகைகளான தாரா, ரக்‌ஷிதா, நடிகரும், பெங்களூரு மத்திய தொகுதி வேட்பாளருமான பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் பெங்களூருவில் உள்ள வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமைகளை ஆற்றினார்.

Next Story