கிராமப்புறங்களில் அதிகமானோர் வாக்களிப்பு - தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தகவல்
கிராமப்புறங்களை சேர்ந்த மக்கள் அதிக அளவில் வாக்களித்து உள்ளதாகவும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தாகவும் தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்தார். புதுவை மாநிலத்தில் வாக்குப்பதிவு முடிந்து இரவு 8.30 மணி அளவில் தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி,
புதுவை எம்.பி. தொகுதி, தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது. காலை 7 மணிமுதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த தேர்தலில் சுமார் 82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் உள்ள 9 லட்சத்து 73 ஆயிரம் வாக்காளர்களில் 7 லட்சத்து 84 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர்.
அவர்களில் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 70 ஆயிரமாகவும், பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 15 ஆயிரமாகவும் உள்ளனர். தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சுமார் 76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வாக்குப்பதிவின்போது சிறுசிறு சம்பவங்களை தவிர்த்து பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படவில்லை. அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.
தேர்தலின்போது 1,940 வாக்குப்பதிவு எந்திரங்களும், தலா 970 கட்டுப்பாட்டு எந்திரம் மற்றும் வி.வி.பாட் எந்திரமும் பயன்படுத்தப்பட்டது. இதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 31 வாக்குப்பதிவு எந்திரம், 20 கட்டுப்பாட்டு எந்திரம், 53 வி.வி.பாட் எந்திரமும் மாற்றப்பட்டன. தட்டாஞ்சாவடி தொகுதியில் ஒரு கட்டுப்பாட்டு எந்திரமும், ஒரு வி.வி.பாட் எந்திரமும் மாற்றப்பட்டது. கிராமப்புறங்களை பொறுத்தவரை அதிக அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக ஊசுடு தொகுதியில் அதிக அளவாக 86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்த அளவாக மாகி தொகுதியில் 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மண்ணாடிப்பட்டு, திருபுவனை, ஊசுடு, மங்களம், இந்திராநகர், காலாப்பட்டு, உப்பளம், நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூர், நெடுங்காடு தொகுதிகளில் 82 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த முறையைவிட இந்த முறை வாக்களிப்போர் சதவீதம் குறைந்திருந்திருப்பதுபோல் தெரிந்தாலும், கடந்த முறையைவிட 75 ஆயிரம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். மாதிரி வாக்குப்பதிவு, வாக்குச்சாவடி முகவர்கள் வருகை தாமதம் போன்ற காரணங்களினால் சில வாக்குச்சாவடிகளில் சற்று தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால் எந்த வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவுக்கான நேரம் நீட்டிக்கப்படவில்லை. ஆனால் 6 மணிக்கு முன்பு வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு கூறினார்.
பேட்டியின்போது தேர்தல் அதிகாரிகள் குமார், தில்லைவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story