திருமண கோலத்தில் வாக்களித்த புதுமண தம்பதிகள்


திருமண கோலத்தில் வாக்களித்த புதுமண தம்பதிகள்
x
தினத்தந்தி 19 April 2019 3:53 AM IST (Updated: 19 April 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் திருமண கோலத்தில் சென்று புதுமண தம்பதிகள் வாக்களித்தனர்.

மதுரை, 

தமிழகம் முழுவதும் நேற்று நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆனால் நேற்றைய தினம் முகூர்த்தநாளாக அமைந்து விட்டதால் பல்வேறு பகுதியில் திருமண விழா நடைபெற்றது. இதையொட்டி காரைக்குடி கழனிவாசல் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் மணமக்கள் வெங்கட்ராமன்-ரஞ்சிதா ஆகியோர் திருமணம் முடிந்தவுடன் அந்த பகுதியில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்திற்கு மணமாலையுடன் திருமண கோலத்தில் சென்று வாக்களித்தனர்.

இதேபோல் காரைக்குடி செக்காலை ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமக்கள் கார்த்திக்-கோகிலா ஆகியோர் திருமணம் முடிந்தவுடன் மணக்கோலத்தில் ராமநாதன் செட்டியார் நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு பதிவு மையத்திற்கு சென்று மணக்கோலத்தில் வாக்குப்பதிவு செய்தனர்.

சிவகங்கையை அடுத்த இடையமேலூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கும் இதே ஊரை சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணிற்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையுடன் மணமக்கள் இருவரும் இடையமேலூர் மேல் நிலைப்பள்ளியில் அமைக்கபட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர்.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் அடங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அப்பய நாயக்கன்பட்டியை சேர்ந்த சுபாஷ்-பிரியா ஆகியோருக்கு நேற்று காலையில் திருமணம் நடந்தது. தாலி கட்டிய கையோடு மணமகன் சுபாஷ் மணமகள் பிரியா ஆகியோர் அங்குள்ள வாக்குச்சாவடிக்கு மணக்கோலத்தில் வந்து வாக்களித்தனர்.

பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட எமனேசுவரம் ஈஸ்வரன் கோவில் 2-வது தெருவை சேர்ந்தவர் காந்தியன். இவரது மகள் ஜெயலட்சுமிக்கும், மதுரையை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் தேர்தல் நாளான நேற்று திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் அவர்களது உறவினர்களிடம் ஆசி பெற்றனர். அடுத்த நிமிடமே தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக மணமக்கள் இருவரும் எமனேசுவரம் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு மணக்கோலத்தில் வந்தனர். அங்கு மணமகள் ஜெயலட்சுமி மட்டும் வாக்களித்தார். இதை பார்த்ததும் அங்கிருந்த வாக்காளர்கள் மணமக்களின் செயலை பாராட்டினர். பின்பு மணமகன் சங்கர் மதுரைக்கு சென்று தனது வாக்கை செலுத்துவேன் என்று தெரிவித்தார்.

மதுரை மகப்பூப்பாளையம் பகுதியில் உள்ள சிட்டி நடுநிலைப்பள்ளியில் எல்லீஸ்நகரை சேர்ந்த அனீஷ்ஜெகன்ராஜ்- நாககிருத்திகா என்ற இளம்ஜோடிகள் திருமண கோலத்தில் கழுத்தில் மாலையுடன் வந்தனர். அவர்களில் நாக கிருத்திகா, வரிசையில் நின்றபடி, வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். மணக்கோலத்தில் வந்த அவர்களை மற்ற வாக்காளர்கள் வியப்புடன் பார்த்தனர். 

Next Story