மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை
மதுரையில் பட்டப்பகலில் வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார். உயிரைக்காப்பாற்றிக் கொள்ள ஒரு வீட்டுக்குள் ஓடியவரை விரட்டிச் சென்று சுற்றி வளைத்து வெட்டிக்கொன்ற 5 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மதுரை,
மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்தவர் வி.கே.குருசாமி, தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டியன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இதனால் இருதரப்பினர் ஆதரவாளர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, ஏற்கனவே கொலை சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்த நிலையில் சமீபத்தில் வி.கே.குருசாமி காரில் இருந்து போலீசார் கைத்துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்தனர். அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு தற்போது அவர் நெல்லை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வி.கே.குருசாமியின் மகள் விஜயலட்சுமி. இவர் முன்னாள் கவுன்சிலர். அவருடைய கணவர் எம்.எஸ்.பாண்டியன் (வயது 46). வக்கீலாகவும், தி.மு.க. பகுதி செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாண்டியன் நேற்று அந்த பகுதியில் கட்சியினரை சந்தித்து வந்தார். கீரைத்துறை நாகுபிள்ளைதோப்பு பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி அருகே நேற்று மதியம் 1 மணி அளவில் அவர் நின்றிருந்தார்.
அப்போது முகத்தை கைக்குட்டையால் மறைத்து 5 பேர், பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் வந்து இறங்கினர். அவர்களை பார்த்ததும் எம்.எஸ்.பாண்டியன் சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்றது.
உயிர் பிழைக்க அந்த பகுதியில் உள்ள ஒரு சந்து வழியாக ஓடி ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். ஆனாலும் அந்த கும்பல் வீட்டிற்குள் புகுந்து பாண்டியனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.
பொதுமக்கள் திரண்டிருந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பகுதியில் நின்றிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாண்டியனை அங்கிருந்தவர்கள் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பாண்டியன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீரைத்துறை போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கொலை செய்யப்பட்ட பாண்டியனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொலைக்கான பின்னணி குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக இந்த கொலையை மர்ம நபர்கள் அரங்கேற்றி இருக்கலாம் என்றும், இதில் யார், யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பட்டப்பகலில் வாக்குச்சாவடி அருகே பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஓட, ஓட விரட்டி தி.மு.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கொலையாளிகள் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story