உருக்கு ஆலை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பால் வெறிச்சோடிய வாக்குச்சாவடி


உருக்கு ஆலை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பால் வெறிச்சோடிய வாக்குச்சாவடி
x
தினத்தந்தி 18 April 2019 11:44 PM GMT (Updated: 18 April 2019 11:44 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே நாகராஜகண்டிகையில் இரும்பு உருக்கு ஆலை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் வாக்குச்சாவடி வெறிச்சோடியது.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நாகராஜகண்டிகை கிராமத்தில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். மேலும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்திருந்தனர்.

இந்தநிலையில் நாகராஜகண்டிகை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு மொத்தம் 552 வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய நிலையில், எந்த வாக்காளர்களும் முதலில் அங்கு வரவில்லை. மேலும் வேட்பாளர்களின் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட அங்கு வராதது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் வாக்குச்சாவடி வெறிச்சோடியது.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த நாகராஜகண்டிகை கிராமத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு உள்ளார்கள் என்பதை அறிந்தவுடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வதி தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மேற்கண்ட பிரச்சினை தொடர்பாக கலெக்டர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உரிய தீர்வு காணப்படும். அதுவரை தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிட்டு உள்ளதாக கூறி அதன் நகலையும் பொதுமக்களிடம் காண்பித்தனர். இதுதவிர கிராம மக்கள் மீது உள்ள வழக்கையும் வாபஸ் பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கிராம மக்கள், அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை. மேலும் பேச்சுவார்த்தையின்போது கூச்சல், குழப்பம் நிலவியது. இந்த நிலையில், 5 மணி நேரத்திற்கு பிறகு மதியம் 12 மணியில் இருந்து மேற்கண்ட வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் சிலர் வாக்களித்தனர். நேற்று மாலை 6 மணி வரை 12 ஆண்களும், 6 பெண்களும் என மொத்தம் 18 பேர் மட்டுமே வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல ஊத்துக்கோட்டை அருகே உள்ள கலவை ஊராட்சியில் உள்ள ஆலப்பாக்கம், எடம்பேடு, அதிலவாக்கம் கிராம மக்களும் குடிநீர் வழங்காததை கண்டித்தும், பஸ், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் நேற்று தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர். மேலும் ஊராட்சி அலுவலகம் எதிரே காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த வசதிகள் செய்துதர காலஅவகாசம் வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் மறியல் போராட்டத்தை கைவிட்டு சென்றுவிட்டனர். ஆனால் தேர்தலை புறக்கணித்து விட்டனர்.

Next Story