சென்னையில், ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது போலீஸ் கமிஷனர் பேட்டி
சென்னையில் அமைதியான முறையில் ஓட்டுப் பதிவு நடந்ததாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
சென்னை,
பின்னர் அவர் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஓட்டுப்பதிவு நடந்ததை பார்வையிட்டார். சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியை பார்வையிட்ட பின்னர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் ஓட்டுப்பதிவின் போது எவ்வித அசம்பாவிதமான சம்பவங்களும் நடக்கவில்லை. சில இடங்களில் மட்டும் சிறு, சிறு பிரச்சினைகள் ஏற்பட்டன. அதுபற்றி புகார் வந்தவுடன் உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று பிரச்சினைகளை சரிசெய்தனர். சில இடங்களில் வாக்காளர்கள் தங்களுக்கு ஓட்டு இல்லை என்று புகார் கூறினார்கள். உடனடியாக தேர்தல் அதிகாரிகளை சம்பவ இடத்துக்கு வரவழைத்து பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.
வாக்குச்சாவடிக்கு நடக்க முடியாமல் வந்த முதியோருக்கு போலீசார் கனிவோடு உதவி செய்தனர். அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். எந்தெந்த பகுதிகளில் பிரச்சினை ஏற்படும்? யார் யார் பிரச்சினையில் ஈடுபடுவார்கள்? என்பதை ஏற்கனவே கண்டறிந்து உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதனால்தான் பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படவில்லை. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக மணலி பகுதியில் 2 பேர் பிடிபட்டனர். தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சென்னை முழுவதும் 550-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு எதிர்பார்த்ததை விட வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் அதிகளவில் குவிந்துவிட்டனர். இதனால் அங்கு பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் போலீஸ் தடியடி எதுவும் நடத்தப்படவில்லை.
உடனடியாக போக்குவரத்து அதிகாரிகளை வரவழைத்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு தேவையான உதவி செய்யப்பட்டது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் ஓட்டுப்பதிவு தொடங்கியவுடன் வாக்குச்சாவடிகளில் பல போலீஸ் அதிகாரிகளும் வரிசையில் நின்று வாக்களித்தனர். சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், தேர்தல் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா, ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திர பாபு உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் சிலர் சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.
Related Tags :
Next Story