ஜோலார்பேட்டை அருகே சூறாவளி காற்றுடன் மழை; வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன
ஜோலார்பேட்டை அருகே சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து நாசம் அடைந்தன.
ஜோலார்பேட்டை,
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மற்றும் ஏலகிரிமலையில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மண்டலவாடி, குன்னத்தூர் பகுதியில் வாழை, மா மரங்கள் சாய்ந்து நாசமாகின. மண்டலவாடி குன்னத்தூரை சேர்ந்த ஸ்ரீராமன் என்ற விவசாயி ஒரு ஏக்கரில் பயிர் செய்திருந்த 1,500 வாழை மரங்களில் குலை தள்ளிய நிலையில் 800 மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதனால் அவருக்கு ரூ.2 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது பற்றி அவர் கூறுகையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு வாழை தார் வாங்கும் வியாபாரியிடம் முன்தொகை பெற்ற நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நஷ்டத்தை எவ்வாறு சமாளிப்பது என தெரியவில்லை என்றார்.
அதேபோல் மண்டலவாடி அரசுவட்டம் பகுதியை சேர்ந்த முருகன் என்ற விவசாயிக்கு சொந்தமான 200 வாழை மரங்கள் சாய்ந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள நிலங்களில் வாழை, மா மரங்கள் சேதமடைந்தது. இதில் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையிட்டனர். ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது. எனவே இந்த நஷ்டத்தை ஈடுசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.