குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்: மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்: மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 April 2019 3:00 AM IST (Updated: 19 April 2019 9:42 PM IST)
t-max-icont-min-icon

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீராலும், அடிக்கடி ஏற்படும் மின்தடையாலும் பாதிக்கப்படுவதாக கூறி இதனை கண்டித்து அப் பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்,

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெரு பகுதியில் உள்ள குடிசைமாற்றுவாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதியில் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கொசுக்கடி மேலும் அதிகமானது. இதுபற்றி அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால் நேற்று காலை வரை மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு வரவில்லை. இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் கொசுக்கடியாலும், மின்விசிறி போட முடியாமல் புழுக்கத்திலும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள், நேற்று காலை 7 மணியளவில் திடீரென எண்ணூர் கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் தினகரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், தங்கள் பகுதியில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் துர்நாற்றத்தாலும், கொசுக்கடியாலும் அவதிப்பட்டு வருகிறோம். மேலும் அடிக்கடி எங்கள் பகுதியில் மின்தடை ஏற்படுவதால் இரவு முழுவதும் கொசுக்கடியால் தூங்க முடியாமல் தவிக்கிறோம். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.

இதையடுத்து போலீசார், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story