ஓசூர் அருகே கிராமங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள்
ஓசூர் அருகே கிராமங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு, சூளகிரி அருகே போடூர்பள்ளம், ஏ.செட்டிப்பள்ளி ஆகிய வனப்பகுதிகளில் நீண்ட நாட்களாக 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் அருகில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ், மா, தென்னை உள்ளிட்ட விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று காலை சானமாவு காட்டிலிருந்து 10 யானைகள் வெளியே வந்தன. பின்னர் அவைகள் போடூர்பள்ளம், காமன்தொட்டி, கானலட்டி கிராமங்கள் வழியாக சென்றன. தொடர்ந்து அத்திமுகம் அருகே நீலிவங்கா என்ற கிராமத்திற்குள் புகுந்தன. அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையோரத்தில் யானைகள் நீண்ட நேரம் சுற்றி திரிந்தன.
இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். மேலும், இது குறித்து அவர்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டன. மீண்டும் யானைகள் ஊருக்குள் புகுந்து விடுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
மேலும் யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டி, அங்கிருந்து கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story