மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 89.62 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி கடந்த ஆண்டை விட 3.17 சதவீதம் குறைந்தது


மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 89.62 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி கடந்த ஆண்டை விட 3.17 சதவீதம் குறைந்தது
x
தினத்தந்தி 20 April 2019 4:30 AM IST (Updated: 19 April 2019 10:32 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 89.62 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டை விட 3.17 சதவீதம் தேர்ச்சி குறைந்து உள்ளது.

தர்மபுரி,

பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி தேர்வு முடிவுகளை வெளியிட்டார். தர்மபுரி மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வை 158 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 20,013 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இவர்களில் 17,935 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 89.62 ஆகும். தேர்வு எழுதியவர்களில் 8,768 மாணவர்களும், 9,167 மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி 92.79 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 89.62 ஆக குறைந்து உள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 3.17 சதவீதம் தேர்ச்சி குறைந்து உள்ளது. இது கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் ராமசாமி கூறுகையில், பிளஸ்-2 பொதுத்தேர்வில் தர்மபுரி மாவட்டத்தில் கலைப்பிரிவு பாடங்களில் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட குறைந்து உள்ளது. இதன்காரணமாக ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதமும் குறைந்து உள்ளது. வணிகவியல் பாடத்தில் 79.77 சதவீத மாணவ-மாணவிகளும், வரலாறு பாடத்தில் 79.59 சதவீத மாணவ,மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தி வரும் கல்வி ஆண்டில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story