பிளஸ்-2 தேர்வு முடிவு திருவள்ளூர் மாவட்டத்தில் 89.49 சதவீதம் பேர் தேர்ச்சி


பிளஸ்-2 தேர்வு முடிவு திருவள்ளூர் மாவட்டத்தில் 89.49 சதவீதம் பேர் தேர்ச்சி
x
தினத்தந்தி 20 April 2019 4:00 AM IST (Updated: 19 April 2019 10:46 PM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 89.49 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் திருவள்ளூர் வருவாய் மாவட்ட அளவில் மொத்தமுள்ள 345 பள்ளிகளில் 19 ஆயிரத்து 695 மாணவர்கள், 22 ஆயிரத்து 371 மாணவிகள் என மொத்தம் 42 ஆயிரத்து 66 பேர் தேர்வு எழுதினார்கள். இவர்களில் மாணவர்கள் 16 ஆயிரத்து 926 பேர், மாணவிகள் 20 ஆயிரத்து 717 பேர் என மொத்தம் 37 ஆயிரத்து 643 பேர் தேர்ச்சி பெற்றனர்.

திருவள்ளூர் வருவாய் மாவட்ட அளவில் மாணவர்கள் 85.94 சதவீதம் தேர்ச்சியும், மாணவிகள் 92.61 சதவீதம் தேர்ச்சியும் என மொத்தம் 89.49 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் 87.17 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2.32 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வருவாய் மாவட்ட அளவில் 2 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 58 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மேலும் பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில் 28 மாணவர்கள் தேர்வு எழுதி அவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் ராஜேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திருவரசு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story