பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியீடு: மாவட்டத்தில் 41 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி


பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியீடு: மாவட்டத்தில் 41 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
x
தினத்தந்தி 20 April 2019 4:30 AM IST (Updated: 19 April 2019 11:25 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் ஒரு அரசுப்பள்ளி உள்பட 41 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி மற்றும் தனியார் பள்ளிகள் என 318 பள்ளிகளை சேர்ந்த 39 ஆயிரத்து 222 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வுகள் எழுதினர். இதில் 35ஆயிரத்து 549 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 90.64 சதவீத தேர்ச்சி ஆகும்.

சேலம் மாவட்டத்தில் 138 அரசு மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வந்தாலும், பிளஸ்-2 தேர்வில் சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள அரசு சேவை இல்லம் பள்ளி மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 41 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியான சிறிது நேரத்திலே மாணவ, மாணவிகள் ஏற்கனவே கொடுத்திருந்த செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் பாடம் வாரியாக மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சில மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு சென்று அங்கு கரும்பலகையில் ஒட்டி வைக்கப்பட்டிருந்த பிளஸ்-2 தேர்வு முடிவுகளை ஆர்வமுடன் பார்த்தனர். அப்போது ஒருவருக்கொருவர் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை தெரிவித்து கொண்டனர்.

அரசு வெளியிட்டுள்ள இணையதள முகவரி மூலமும் பலர் பிளஸ்-2 மதிப்பெண்களை பார்த்து தெரிந்து கொண்டனர். சேலம் குகை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த பிளஸ்-2 மாணவிகள் தங்களது மதிப்பெண்களை செல்போனில் உடனடியாக பார்த்தனர்.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 147 மாணவ-மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். அதாவது, கணக்கு பதிவியல் பாடத்தில் 47 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 46 பேரும், வணிகவியல் பாடத்தில் 30 பேரும், பொருளியல் பாடத்தில் 7 பேரும், வேதியியல் பாடத்தில் 6 பேரும், கணிதம் பாடத்தில் 5 பேரும், உயிரியல் பாடத்தில் 4 பேரும், தாவரவியல் பாடத்தில் ஒருவரும், வணிக கணிதவியல் பாடத்தில் ஒருவரும் என மொத்தம் 147 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

Next Story