பல்லடத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர் மர்ம சாவு போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
பல்லடத்தில் மக்கள் நீதிமய்யம் கட்சி தொண்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லடம்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம், பனப்பாளையம், ஏ.டி.காலனியை சேர்ந்தவர் கருப்பன். இவருடைய மகன் பாலமுருகன்(வயது 36). இவர் மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டராக இருந்தார். இவருடைய மனைவி விஜயகுமாரி(31). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
இவர் நேற்று முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது தேர்தல் பூத் ஏஜெண்டாக பணியாற்றினார். அதன்பிறகு இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பிய அவர் மனைவி, குழந்தைகளுக்கு புரோட்டா வாங்கி கொண்டு வந்து கொடுத்தார். பின்னர் பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு வேலை இருக்கிறது என்று கூறி விட்டு அன்று இரவே புறப்பட்டு சென்றார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
மறுநாள் காலையிலும் பாலமுருகன் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி விஜயகுமாரி கட்சி அலுவலகத்துக்கு சென்றார். அங்கு பாலமுருகன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினரும் அங்கு ஓடி வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து விஜயகுமாரி மற்றும் அவரது உறவினர்கள் 40-க்கும் மேற்பட்டோர் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர்.
அப்போது போலீசாரிடம், விஜயகுமாரி, தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாகவும், எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி பாலமுருகனின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம், போலீசார், பாலமுருகனின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகே அவரது சாவு குறித்த முழு விவரம் தெரிய வரும். எனவே கலைந்து செல்லுங்கள் என்றனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் விஜயகுமாரி பல்லடம் போலீசில் அளித்த புகார் மனுவில், சம்பவத்தன்று தனது கணவரும், அவரது நண்பர்கள் 5 பேரும் கட்சி அலுவலகத்தில் உள்ள மேல்மாடிக்கு சென்று மது அருந்தி உள்ளனர். போதை அதிகமாக இருந்ததால் மற்றவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். ஆனால் எனது கணவர் அங்கே படுத்து விட்டார். மறுநாள் காலையில் அங்கு சென்று நான் பார்த்த போது எனது கணவர் இறந்து கிடந்தார்.
எனவே அவரது சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி இருந்தார். இதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story