தூத்துக்குடி தொகுதியில் தேர்தல் செலவு தாக்கல் செய்யாத சுயேச்சை வேட்பாளர் மீது வழக்கு
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத சுயேச்சை வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத சுயேச்சை வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தல்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலில் 3 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், 8 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 37 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் முதல் வாக்குப்பதிவு வரையிலான தேர்தல் செலவு கணக்கு விவரங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி கடந்த 3, 8, 15-ந்தேதிகளில் தேர்தல் செலவின பார்வையாளரிடம் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் நேரில் ஆஜராகி, தேர்தல் செலவு கணக்குகளை சமர்ப்பித்தனர்.
சுயேச்சை வேட்பாளர் மீது வழக்கு
ஆறுமுகநேரியை சேர்ந்த மரகதராகவராஜ் என்பவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் தேர்தல் செலவு கணக்குகளை செலவின தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் தாக்கல் செய்யவில்லை. இதனால் தேர்தல் பார்வையாளர், வேட்பாளர் மரகதராகவராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய பரிந்துரை செய்தார்.
அதன்படி, தூத்துக்குடி தேர்தல் பிரிவு தாசில்தார் நம்பிராயர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், சுயேச்சை வேட்பாளர் மரகதராகவராஜ் மீது இந்திய தண்டனை சட்டம் 171(1) பிரிவின் கீழ் தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story