புனித வெள்ளியையொட்டி சிலுவை பாதை சிறப்பு பிரார்த்தனை


புனித வெள்ளியையொட்டி சிலுவை பாதை சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 19 April 2019 9:30 PM GMT (Updated: 19 April 2019 7:18 PM GMT)

புனித வெள்ளியையொட்டி சிலுவை பாதை சிறப்பு பிரார்த்தனை நேற்று நடந்தது.

நெல்லை,

புனித வெள்ளியையொட்டி சிலுவை பாதை சிறப்பு பிரார்த்தனை நேற்று நடந்தது.

சிலுவை பாதை

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து உயிர் தியாகம் செய்த நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கிறார்கள். இதையொட்டி கிறிஸ்தவ மக்கள் சாம்பல் புதனுடன் 40 நாட்கள் தவக்காலம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் பிரார்த்தனைகள் நடைபெற்றது. பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலயத்தில் சிலுவை பாதை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அங்குள்ள மாநகராட்சி தண்ணீர் தொட்டி அருகில் இருந்து இந்த பிரார்த்தனை வழிபாடு ஊர்வலமாக தொடங்கியது. 14 நிலைகளில் இயேசுவின் நிலைப்பாட்டை உணர்த்தும் வகையில் நின்று பிரார்த்தனை செய்து கொண்டே பேராலயத்துக்கு வந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட குருகுல அதிபர் சேவியர் டெரன்ஸ், பங்கு தந்தை ராஜேஷ், உதவி பங்கு தந்தையர் மாசிலாமணி, அலெக்ஸ் மற்றும் இறை மக்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு பிரார்த்தனை

இதன் தொடர்ச்சியாக இன்று (சனிக்கிழமை) இரவு கத்தோலிக்க ஆலயங்களில் இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் வகையிலான சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது. இதே போல் சி.எஸ்.ஐ. ஆலயங்களில் நாளை காலை ஈஸ்டர் சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. நாளை கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.

Next Story