சென்னையில் இருந்து தஞ்சை வந்த உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தவறவிட்ட ரூ.5 லட்சம் நகைகள் ரெயில்வே போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்


சென்னையில் இருந்து தஞ்சை வந்த உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தவறவிட்ட ரூ.5 லட்சம் நகைகள் ரெயில்வே போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 19 April 2019 9:30 PM GMT (Updated: 19 April 2019 7:36 PM GMT)

சென்னையில் இருந்து தஞ்சை வந்த உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தவற விட்ட ரூ.5 லட்சம் நகைகளை மீட்ட ரெயில்வே போலீசார், அதை உரியவரிடம் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர், 

சென்னை சைதாப்பேட்டை வெங்கட்டாபுரத்தை சேர்ந்தவர் சங்கர்லிங்கம். இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி(வயது 37). இவர், தனது உறவினர்கள் 16 பேருடன் வேளாங்கண்ணிக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக சென்னை எழும்பூரில் இருந்து நாகை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்தார். நேற்று முன்தினம் ஜெயலட்சுமி தனது உறவினர்களுடன் எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு சென்றார்.

ஆனால் அதற்கு முன்பாக கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்று விட்டது. இதனால் அவர்கள், தஞ்சைக்கு சென்று அங்கிருந்து வேளாங்கண்ணிக்கு செல்லலாம் என முடிவு செய்தனர். இதற்காக சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சைக்கு வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பதிவுக்கான பெட்டியில் ஏறி பயணம் செய்தனர். அப்போது ஜெயலட்சுமி நகை, பணம் வைத்திருந்த பேக்கை தன்னுடைய இருக்கைக்கு அடியில் வைத்திருந்தார்.

ரெயில் புறப்பட்ட சில நிமிடங்களில் முன்பதிவு பெட்டிக்கு வந்த டிக்கெட் பரிசோதகர், ஜெயலட்சுமி மற்றும் அவர்களது உறவினர்கள் வைத்திருந்த டிக்கெட்டை பரிசோதித்தபோது கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்ய வைத்திருந்த டிக்கெட் மூலம் பயணம் செய்தது தெரிய வந்தது. அந்த டிக்கெட் மூலம் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்ய முடியாது எனவும், முன்பதிவில்லாத பெட்டியில்தான் பயணம் செய்ய வேண்டும் என்றும், எனவே அடுத்து வரக்கூடிய தாம்பரம் ரெயில் நிலையத்தில் இறங்கி வேறு பெட்டிக்கு மாறிக்கொள்ளுமாறும் டிக்கெட் பரிசோதகர் கூறினார்.

அதன்படி தாம்பரம் ரெயில் நிலையத்தில் அந்த ரெயில் வந்து நின்றவுடன் ஜெயலட்சுமியும், அவரது உறவினர்களும் கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் தங்களது உடமைகளை சரிபார்த்தனர். அப்போது நகை-பணம் இருந்த பேக்கை காணவில்லை. அதை ரெயிலிலேயே தவற விட்டது தெரிய வந்தது. உடனே அவர்கள் தாம்பரம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் பாதுகாப்பு பணிக்கு செல்வதற்காக பண்ருட்டியில் நின்று கொண்டிருந்த போலீஸ் ஏட்டுகள் செந்தில்குமார், நடராஜன், சவுந்தர்ராஜன் ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு விவரத்தை எடுத்து கூறினார்.

இதையடுத்து உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாதுகாப்பு பணிக்காக சென்ற 3 ஏட்டுகளும் முன்பதிவு பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டியாக சென்று பார்த்தனர். கும்பகோணத்தில் ரெயில் நின்றபோது எஸ்-2 பெட்டிக்கு சென்று போலீஸ் ஏட்டுகள் பார்த்தனர். அப்போது அங்கு கருப்பு நிற பேக் ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த பேக்கை எடுத்த அவர்கள், இதுகுறித்து தாம்பரம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தில் அந்த பேக்கை ஒப்படைக்கும்படி கூறினர்.

உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் தஞ்சைக்கு வந்தவுடன் ரெயிலில் இருந்து பேக்குடன் இறங்கிய போலீஸ் ஏட்டுகள் 3 பேரும், தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் பேக்கை ஒப்படைத்தனர். பின்னர் பேக் கிடைத்த தகவல் உரியவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே ஜெயலட்சுமி தனது உறவினர்களுடன் தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்திற்கு நேற்று வந்தார்.

அவர் முன்னிலையில் பேக்கை திறந்து பார்த்தபோது அதில் 20 பவுன் நகைகள், ரூ.8 ஆயிரம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை இருந்தது. இதை பார்த்து ஜெயலட்சுமி மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் நகை-பணத்துடன் பேக்கை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன், ரெயில் நிலைய மேலாளர் ராஜசேகரன், ரெயில்வே தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ் மற்றும் ஏட்டுகள் சிவனேசன், சுரேஷ்குமார், பிரபாகரன் ஆகியோர் ஜெயலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

தவறவிட்ட நகை-பணத்துடன் பேக் கிடைத்த மகிழ்ச்சியில் ஜெயலட்சுமி போலீசாருக்கு நன்றி தெரிவித்து விட்டு தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணிக்கு புறப்பட்டு சென்றார். மீட்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

Next Story