திருச்சி உறையூரில் மின்சாரம் தாக்கி தையல் தொழிலாளி பலி சித்தப்பாவை காப்பாற்ற சென்ற வாலிபரும் இறந்த பரிதாபம்


திருச்சி உறையூரில் மின்சாரம் தாக்கி தையல் தொழிலாளி பலி சித்தப்பாவை காப்பாற்ற சென்ற வாலிபரும் இறந்த பரிதாபம்
x
தினத்தந்தி 20 April 2019 4:00 AM IST (Updated: 20 April 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி உறையூரில் மின்சாரம் தாக்கி தையல் தொழிலாளியும், அவரை காப்பாற்ற சென்ற அவருடைய அண்ணன் மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி,

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

திருச்சி உறையூர் பணிக்கன் தெருவை சேர்ந்தவர் கிட்டு(வயது 68). இவர், தையல்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது வீடு ஓடுகளால் வேயப்பட்டதாகும். வீட்டின் முன்பு நிழலுக்காக சிமெண்டு சீட் மூலம் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. கிட்டுக்கு உதவியாக அவரது அண்ணன் கோபாலின் மகன் மகாதேவன்(28), அவரது வீட்டிலேயே தங்கி இருந்தார். மகாதேவனுக்கும் திருமணம் ஆகவில்லை. நேற்று மாலை உறையூர் பகுதியில் பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. இதனால், வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த சிமெண்டு சீட்டும் காற்றில் தூக்கப்பட்டு விலகி கிடந்தது.

அதைப்பார்த்த கிட்டு, சிமெண்டு சீட்டை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக தரையில் நட்டு வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியை அவர் பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக கம்பியில் மின்சாரம் பாய்ந்து, கிட்டுவை தாக்கியது. அவர், கம்பியை பிடித்தபடி அபயக்குரல் எழுப்பி அலறினார்.

தனது சித்தப்பாவின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டிற்குள் இருந்த மகாதேவன் பதறியடித்தபடி ஓடோடி வந்தார். அவர், சித்தப்பாவை காப்பாற்றும் முயற்சியில் அவரும் கம்பியை பிடித்தவாறு இழுத்ததாக கூறப்படுகிறது. இதனால், மகாதேவனையும் மின்சாரம் தாக்கியது. சிறிது நேரத்தில் இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உறையூரில் நேற்று மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையால், சிமெண்டு சீட்டிற்கு மேலே மின்மோட்டாருக்கு சென்ற மின்சார வயர் உராய்ந்தபடி கிடந்துள்ளது. இதனால், மழை ஈரத்தில் வயரில் இருந்து மின்சாரம் கசிந்து இரும்பு தகடு முழுவதும் பரவி இருந்துள்ளது. அது தெரியாமல் கிட்டு, சிமெண்டு சீட்டை சரி செய்ய முயற்சித்ததால் மின்சாரம் பாய்ந்து இருவரும் பலியானது தெரியவந்தது.

தகவல் அறிந்ததும் உறையூர் போலீசார் விரைந்து சென்று, பலியான இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம், மின்சாரம் தாக்கி தையல் தொழிலாளியும், அவரை காப்பாற்ற சென்ற அவருடைய அண்ணன் மகனும் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story