நெல்லையில் புத்தக கண்காட்சி தொடங்கியது 28-ந் தேதி வரை நடக்கிறது


நெல்லையில் புத்தக கண்காட்சி தொடங்கியது 28-ந் தேதி வரை நடக்கிறது
x
தினத்தந்தி 20 April 2019 3:00 AM IST (Updated: 20 April 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் புத்தக கண்காட்சி நேற்று தொடங்கியது.

நெல்லை, 

நெல்லையில் புத்தக கண்காட்சி நேற்று தொடங்கியது.

புத்தக கண்காட்சி

உலக புத்தக தினத்தையொட்டி நெல்லையில் தேசிய வாசிப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் “நெல்லை புத்தக திருவிழா” என்ற பெயரில் புத்தக கண்காட்சியை நடத்துகிறார்கள். நெல்லை வண்ணார்பேட்டை சகுந்தலா ஓட்டல் சுமங்கலி திருமண மஹாலில் நேற்று இதற்கான தொடக்க விழா நடைபெற்றது.

தேசிய வாசிப்பு இயக்க தலைவர் தம்பான் தலைமை தாங்கினார். தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்க பொருளாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். வாசிப்பு இயக்க செயலாளர் சரவணகுமார் வரவேற்று பேசினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அறிவியல் புல முதல்வர் கிருஷ்ணன், புத்தக கண்காட்சியை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மாவட்ட மைய நூலகர் முத்துகிருஷ்ணன் முதல் புத்தகத்தை பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணை பதிவாளர் கலாதேவி, நூலகத்துறை தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். இதில் வாசகர் வட்ட தலைவர் மரியசூசை, ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தேசிய வாசிப்பு இயக்க பொருளாளர் பாலாஜி நன்றி கூறினார்.

இந்த கண்காட்சி வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தினமும் காலை 10.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.

‘தினத்தந்தி’ அரங்கு

இந்த கண்காட்சியில் “தினத்தந்தி பதிப்பகம்” சார்பில் ஒரு அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு தினத்தந்தி பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதுதவிர முன்னணி பதிப்பக புத்தகங்கள், சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள், கலை, கல்வி, வரலாறு, அறிவியல், ஆன்மிகம், ஜோதிடம், அரசியல், வணிகம், பொருளாதாரம், போட்டித்தேர்வு, மருத்துவம், புதினம், விவசாயம், வேளாண்மை என 1 லட்சம் தலைப்புகளில், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அனைத்து புத்தகங்களும் 10 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தினமும் சொற்பொழிவு

தினமும் மாலையில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேராசிரியர்களின் சொற்பொழிவும் நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மாணவர்களின் கவிதை, ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெறும். இதில் பங்கேற்கும் அனை த்து மாணவ-மாணவிகளுக் கும் பரிசுகள் வழங்கப்படும்.

Next Story