மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன வாக்கு எண்ணும் மையத்தின் அறைகள் பூட்டி சீல் வைப்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணும் மையத்தின் அறைகளில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி 1,031 வாக்குச்சாவடி மையங்களிலும் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 79.11 சதவீத வாக்குகள் பதிவானது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் சீல் வைத்தனர்.
பின்னர் இரவோடு, இரவாக அந்த எந்திரங்கள் மொபைல் குழு வேன் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது. அவ்வாறு கொண்டுவரப்பட்ட எந்திரங்கள் முறையாக சட்டமன்றத்தொகுதிவாரியாக கணினியில் பதிவுசெய்யப்பட்ட பின்னர் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுலீரியில், வேட்பாளர்கள் மற்றும் முகவர்களிடையே வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள விபரம் குறித்தும், பாதுகாப்பு அறைகள் பூட்டி சீல் வைக்கும் முறைகள் குறித்தும் நேற்று காலை தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் தேர்தல் பார்வையாளர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் பொதுப்பார்வையாளர் பிரசாந்த் குமார், தேர்தல் செலவினப்பார்வையாளர் மனோஜ்குமார், தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அன்பழகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் மற்றும் வேட்பாளளர்கள் அவர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குஎண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதில் தேர்தல் நடத்தும் அதிகாரி முத்திரை மற்றும் வேட்பாளர்களின் முத்திரை கொண்டு சீல் வைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் மூன்று தளங்களிலும் சட்டமன்றத்தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கபடும் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 24 மணிநேர மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள்ளும், சி.சி.டி.வி கேமரா கண்காணிப்பிற்குள்ளும் வாக்கு எண்ணிக்கை மையம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், மாவட்ட வருவாய் அதகாரி சூர்யபிரகாஷ், சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.