பிளஸ்டு–2 தேர்வு முடிவு வெளியீடு: கரூர் மாவட்டத்தில் 94.07 சதவீதம் பேர் தேர்ச்சி மாநில அளவில் 10–வது இடம் பெற்றது
கரூர் மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியதில் 94.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதத்தில் மாநில அளவில் கரூர் மாவட்டம் 10–வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
கரூர்,
தமிழத்தில் 2018–19–ம் கல்வி ஆண்டில் பிளஸ்–2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு ஏப்ரல் 19–ந்தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று காலை 9.30 மணியளவில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பள்ளிக்கல்வித்துறையின் மூலம் இணையளத்தில் பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியானது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையல், கரூரிலுள்ள மாவட்ட மைய நூலகம் உள்ளிட்ட இடங்களில் மாணவ, மாணவிகள் தேர்வு முடிவை பார்ப்பதற்கு ஆர்வத்துடன் வந்தனர். அங்கு அவர்களுக்கு கணினியில் பிளஸ்–2 மதிப்பெண்கள் விவரம் இலவசமாக நகல் எடுத்து கொடுக்கப்பட்டது. இதைத்தவிர தனியார் கணினி மையங்கள் உள்ளிட்டவற்றுக்கு சென்றும் தேர்வு முடிவினை மாணவர்கள் அறிந்து கொண்டனர். அப்போது தேர்ச்சி பெற்றதை அறிந்ததும் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். மேலும் ரேங்கிங் சிஸ்டம் தற்போது கிடையாது என்பதால் பெரும்பாலான மாணவர்கள் மதிப்பெண்களை தெரிந்து கொண்டதும் கவலையடையாமல் உற்சாகத்துடனேயே காணப்பட்டனர். தேர்வு முடிவினை பார்க்க பள்ளிகளுக்கு வந்த மாணவ–மாணவிகள் தங்களது நண்பர்களிடம் நலம் விசாரித்து செல்பி எடுத்து கொண்டதையும் ஆங்காங்கே பார்க்க முடிந்தது.
தற்போது மாணவர்களது பெற்றோர் செல்போன் எண்ணுக்கு கல்வித்துறை சார்பில் தேர்வு முடிவு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. இதனால் வீட்டில் இருந்து கொண்டே பலரும் தேர்வு முடிவு, மதிப்பெண்களை தெரிந்து கொண்டனர். இதன் காரணமாக தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு மாணவர்கள் நேரில் சென்று அங்கு அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த தேர்வு முடிவினை நண்பர்கள், தோழிகளுடன் சென்று பார்த்து தெரிந்து கொள்வதில் பலரும் ஆர்வம் காட்டவில்லை. எனினும் சிலர் பள்ளிகளுக்கு வந்து அறிவிப்பு பலகையில் தேர்வு முடிவினை பார்த்து விட்டு, தங்களது ஆசிரிய–ஆசிரியைகளை சந்தித்து உயர்நிலை கல்வி பயில்வது பற்றி ஆலோசித்து சென்றதை காண முடிந்தது. அந்த வகையில் கரூர் மாரியம்மன் கோவில் அருகேயுள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த சில மாணவிகளுக்கு அதன் தலைமை ஆசிரியை விஜயராணி தேர்வு முடிவினை அறிவிப்பு பலகையில் பார்த்து விவரம் கூறினார்.
மேலும் பிளஸ்–2–க்கு முதன் முறையாக 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டதும், மொழிப்பாடத்தேர்வுகள் ஒரே தாளாக நடத்தப்பட்டதும் இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட்ட புதிய நடைமுறைகள் ஆகும். 600–ஐ நெருங்கிய வகையில் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு அவர்களது பெற்றோர், அவர்களது பள்ளியின் ஆசிரிய–ஆசிரியைகள் ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டியதை காண முடிந்தது. தேர்வு முடிவு வெளியானதும் மதிப்பெண்களை தெரிந்து கொள்ள முன்பு நீண்ட நேரமாகும். ஆனால் தற்போது முடிவு வெளியான உடனேயே அனைவரும் மதிப்பெண்களை தெரிந்து கொண்டனர். இதனால் முன்பிருந்த பரபரப்பு தற்போது குறைந்து மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக உள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
கரூர் மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வு முடிவு குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தங்கவேல் கூறியதாவது:–
கரூர் மவாட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தில் நடந்த பிளஸ்–2 தேர்வினை 5,322 மாணவர்கள், 5,797 மாணவிகள் என மொத்தம் 11,119 பேர் எழுதினார்கள். இதில் 4,919 மாணவர்கள், 5,541 மாணவிகள் என 10,460 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.07 ஆகும். இது கடந்த ஆண்டை விட (93.85 சதவீதம்) சற்று அதிகமாகியிருப்பது மகிழ்ச்சி தரும் ஒன்றாக இருக்கிறது. மேலும் கடந்த ஆண்டு மாநில அளவில் கரூர் 13–வது இடம் பெற்றது. ஆனால் தற்போது மாநில அளவில் கரூர் தற்போது 10–வதாக இடம் பிடித்திருக்கிறது.
தற்போது 51 அரசு பள்ளிகளில் பயின்ற 5,079 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதியதில் 4,600 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதன் தேர்ச்சி சதவிதம் 90.57 ஆகும். கடந்த ஆண்டு அரசு பள்ளி தேர்ச்சி சதவிதம் 90.24 ஆகும். 39 தனியார் பள்ளிகளை சேர்ந்த 4,212 பேர் தேர்வு எழுதியதில் 4,148 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். தேர்ச்சி சதவிதம் 98.48 ஆகும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி சதவிதம் 93.65 ஆகும்.
மேலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளில் கண்பார்வை குறைபாடுடைய ஒருவர், காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் 2 பேர் என தேர்வு எழுதி அவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். உடல் ஊனமுற்றவர்களில் 19 பேர் தேர்வு எழுதியதில் 18 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதர வகை மாற்றுத்திறனாளிகள் 11 பேர் தேர்வு எழுதியதில் 9 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். தேர்ச்சி சதவிதம் குறைந்த பள்ளிகளை கணக்கெடுத்து தலைமை ஆசிரியர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி இனி வரும் காலங்களில் அதிகரிக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குளித்தலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் அங்கு தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்தன. இதனை மாணவ–மாணவிகள், பெற்றோர் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.